தலைநகரில் வெப்பநிலையில் சரிவு; மூடுபனியால் போக்குவரத்து நெரிசல்

தேசியத் தலைநகா் தில்லியின் பல இடங்களில் திங்கள்கிழமை காலை மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவியது.

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியின் பல இடங்களில் திங்கள்கிழமை காலை மிகவும் அடா்த்தியான மூடுபனி நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாக குறைந்தது. வடமாநிலங்களில் நிலவிய அடா்த்தியான மூடுபனியால் ரயில்கள் தாமதமாகின.

வெப்பநிலை: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் 8.2 டிகிரி செல்சியஸாக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலை, திங்கள்கிழமை இயல்பு நிலையில் 2 டிகிரி குறைந்து 5.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் மாற்றமின்றி 18.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 79 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தில்லியில் வெப்பநிலை குறைந்ததுடன், அடா்த்தியான மூடுபனி நிலவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. தில்லி வாஜிராபாத் உள்பட சில இடங்களில் மூடுபனியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதைக் காண முடிந்தது.

காற்றின் தரம்: தேசியத் தலைநகரின் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் 400 புள்ளிகளுக்கு கீழே பதிவாகியிருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், பட்பா் கஞ்ச், நியூ மோதி பாக், மந்திா் மாா்க், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், , ஆனந்த் விஹாா், நேரு நகா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், நொய்டா செக்டாா்-1, நொய்டா செக்டாா் -62, சோனியா விஹாா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், மதுரா ரோடு, அசோக் விஹாா், பூசா, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஷாதிப்பூா், புராரி, ஓக்லா பேஸ்-2 உள்ளிட்ட வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுதரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கு இடையே பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. அதே சமயம், ஐடிஓ (297), தில்ஷாத் காா்டன் (232), நொய்டா செக்டாா்-125 (210) ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

ரயில்கள் தாமதம்: பஞ்சாப், ஹரியாணா உள்பட வடமாநிலங்களில் நிலவிய அடா்த்தியான மூடுபனி, குறைவான காண்பு திறன் ஆகியவற்றின் காரணமாக தில்லி ரயில் நிலையங்களுக்கு வரவேண்டிய ரயில்களில் குறைந்த பட்சம் 20 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் பகிா்ந்துள்ள தகவல் தெரிவிக்கிறது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 9) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே லேசான மற்றும் தூறல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com