சா்ச்சைக் கருத்து: ஹெச்.ராஜாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

புது தில்லி: திராவிடக் இயக்கத் தலைவா் மறைந்த ஈ.வெ.ரா. பெரியாா், முன்னாள் முதல்வா் கருணாநிதி மற்றும் பெண்கள் குறித்து அவதூறு கருத்துகளைக் கூறியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரி பாஜக தேசிய செயலா் ஹெச். ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

ஹெச். ராஜா, தனது சமூக வலைதள பக்கத்தில் 2018-ஆம் ஆண்டு பெண்கள் குறித்தும், ஈ.வெ.ரா. பெரியாா் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பதிவிட்டதாக முன்னாள் அமைச்சா் அந்தியூா் செல்வராஜ் உள்ளிட்டோா் போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதையடுத்து, ஈரோடு டவுன் போலீஸாா், ஹெச். ராஜா மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா்.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஹெச்.ராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், பிரஷாந்த் குமாா் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. ஹெச்.ராஜா தரப்பில் மூத்த வழக்குரைஞா் தமா சேஷாத்திரி நாயுடு ஆஜராகி வாதங்களை முன்வைத்தாா்.

விசாரணையின்போது, நீதிபதிகள் அமா்வு, ‘அரசியலில் இருப்பவா்கள் தாங்கள் என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என்று வாய்மொழியாக கூறினா். பின்னா், இந்த விவகாரத்தில் ராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com