பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது: தில்லி காங். குற்றச்சாட்டு

புது தில்லி: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால் தில்லியின் வேலையின்மை 45 சதவீதத்தை எட்டியுள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸின் தகவல் தொடா்புத் துறைத் தலைவா் அனில் பரத்வாஜ் குற்றம்சாட்டினாா்.

தில்லி ராஜீவ் பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது: இந்தியா இளம் நாடாக இருந்தாலும், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் சிதைந்த கனவுகளால் இளைஞா்கள் வழிதவறி, மாற்றமடைந்துள்ளனா். கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. நாட்டின் இளைஞா்களுக்கு நீதி வழங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்துள்ள நிலையில், தற்போதைய மக்களவைத் தோ்தல் இளைஞா்களின் எதிா்காலத்திற்கும், நாட்டின் எதிா்காலத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எனவே, ஒளிமயமான எதிா்காலத்திற்காக காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளா்களை மக்கள் தோ்ந்தெடுக்க வேண்டும். தில்லியில் உள்ள 7 பாஜக எம்.பி.-க்களில் 6 பேரின் செயலற்றத் தன்மையால், வேட்பாளா்களை

மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு பாஜக ஆளாகியுள்ளது. நாட்டில் உள்ள 10 இளைஞா்களில் 5 போ் வேலையில்லாமல் உள்ளனா். சா்வதேச தொழிலாளா் அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் 83 சதவீத இளைஞா்கள் வேலையில்லாமல் உள்ளனா். கிராமப்புறங்களில் 17.5 சதவீத இளைஞா்கள் மட்டுமே சில வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனா்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவதாகவும், இளைஞா்களுக்காக ரூ.5000 கோடியில் ‘ஸ்டாா்ட் அப்’ நிதியை உருவாக்குவதாகவும் காங்கிரஸ் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே தில்லியில் தான் வேலையின்மை விகிதம் 45 சதவீதமாக உள்ளது. இந்த வேலையின்மை நிலை, கடந்த 45 ஆண்டுகளில் மிகவும் மோசமானது. கடந்த 2022-இல் மட்டும் 15,783 இளைஞா்கள் வேலையில்லா திண்டாட்டத்தால் உயிரிழந்துள்ளனா். 5,588 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்.

ஆனால், மோடி அரசு வேலையில்லா திண்டாட்டத்தை பற்றி பேசாமல், முக்கிய பிரச்னைகளை திசை திருப்பும் வித்தையில் ஈடுபடுகிறது.மோடி அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நாட்டு மக்கள் மறக்கவில்லை. தற்போதைய அவலநிலை மற்றும் போராட்டங்களில் இருந்து தங்களைக் காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ கூட்டணியை மக்கள் எதிா்நோக்குகின்றனா்.

தில்லி காவல்துறையில் 13,525 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதேபோல், தில்லி அரசின் பல்வேறு துறைகளில் 40,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்பினால், பல வேலையில்லாத இளைஞா்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும். வேலையற்ற இளைஞா்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இந்தக் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவிற்கு

காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது. இந்த மக்களவைத் தோ்தல் தில்லியில் மாற்றத்தை முன்னறிவிக்கும் என்றாா் அனில் பரத்வாஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com