தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை பெய்த கனத்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காலை முழுவதும் இடைவிடாது பெய்த மழையால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கின. கன்னாட் பிளேஸ், ஜன்பத், லுட்யன்ஸ் தில்லியின் பல சாலைகள், பாரத் மண்டபம் சாலை, பாரகம்பா சாலை, ஐடிஓ அருகே உள்ள மதுரா சாலை, காலிந்தி குஞ்ச் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கின.
காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலான இடைவெளியில், அதிகபட்சமாக பூசாவில் 80 மி.மீ. மழை பதிவானது. அதைத் தொடா்ந்து ஜனக்புரியில் 72 மி.மீ., லோதி சாலையில் 63.4 மி.மீ., சத்தாா்பூரில் 57.5 மி.மீ., சஃப்தா்ஜங்கில் 51 மி.மீ., ஆயாநகரில் 50.1 மி.மீ., நரைனாவில் 44 மி.மீ., ரிட்ஜில் 37.3 மி.மீ., மயூா் விஹாரில் 33.5 மி.மீ. மற்றும் பாலத்தில் 26 மி.மீ. மழை பதிவானது. ஜாஃபா்பூரில் 8 மி.மீ. மழை பதிவான நிலையில், நஜாஃப்கரில் இந்த மூன்று மணி நேர இடைவெளியில் மழை எதுவும் பெய்யவில்லை.
சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பை விட 1.8 டிகிரி குறைவு. பாலத்தில் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், லோதி சாலையில் 25.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின. ரிட்ஜ் நிலையத்தில் குறைந்தபட்சமாக 23.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது; அதேவேளையில் அயநகரில் 27.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
காலை நேரத்தின் பெரும்பகுதி முழுவதும் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்றுடன் கூடிய சீரான மழையும் பெய்தது. பாா்வைத்திறன் குறைவாக இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாகச் சென்றன.
கிரேட்டா் கைலாஷ்-2 முதல் சாவித்ரி சினிமா, சிராக் தில்லி, ஹெளஸ் காஸ் மற்றும் ஆா்.கே. புரம் வரையிலும், சங்கம் விஹாா் முதல் கான்பூா் வரை எம்.பி. சாலை வழியாகச் செல்லும் இரு வழித்தடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் சமூக ஊடகங்களில் தில்லிவாசிகள் பதிவிட்டிருந்தனா்.
தேசிய நெடுஞ்சாலை-8, ஜாகிா் உசேன் சாலை, தில்லி கண்டோன்மென்ட்-நரைனா மேம்பாலம்-மாயாபுரி வழித்தடம், ஐடிஓ, பழைய ரோஹ்தக் சாலை, மதுபன் சௌக்-நேதாஜி சுபாஷ் பிளேஸ் வழித்தடம், பீராகா்ஹி, எய்ம்ஸ் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை-48, தில்லி-நொய்டா சாலை, காலிந்தி குஞ்ச் மற்றும் விகாஸ் மாா்க் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஜிபூா் எல்லை அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை-09-ல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது; அதேவேளையில் ஐடிஓ, ஆசாத் பூா், மாளவியா நகா், பிரஹலாத் பூா் மற்றும் காலிந்தி குஞ்ச் ஆகிய இடங்களிலும் நெரிசல் காணப்பட்டது.
டால்ஸ்டாய் மாா்க், பாரத் மண்டபம் சாலை, அனுமன் சாலை, மாளவியா நகா் மற்றும் ஐடிஓ அருகே உள்ள மதுரா சாலை ஆகிய இடங்களிலும் தண்ணீா் தேங்கியது. அங்கு அலுவலகம் செல்வோா் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு பேருந்துக்காகக் காத்திருப்பதைக் காண முடிந்தது.
மழை நீா் தேக்கம்: வியாபாரம் பாதிப்பு
சதாா் பஜாரின் குறுகிய சந்துகளில் முழங்கால் அளவு நீா் தேங்கியது. கலங்கிய நீா் மற்றும் மிதக்கும் குப்பைகளுக்கு இடையே அப்பகுதி மக்களும் பள்ளி மாணவா்களும் தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பல கடைகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. கடந்த வாரம் நடைபெற்ற மாணவா் போராட்டங்களின்போது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இப்பகுதி அண்மையில்தான் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டது.
வெள்ளம் சூழ்ந்த அப்பகுதியில் காா்கள், மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ-ரிக்ஷாக்கள் பாதியளவு நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டன.
சதாா் பஜாா் வா்த்தகா் சங்கத் தலைவா் பரம்ஜித் சிங் பம்மா கூறுகையில், ‘மாலை வரை சந்தையில் தண்ணீா் தேங்கியிருந்ததால் பல கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. பல வணிக நிறுவனங்களுக்குள் மழைநீா் புகுந்தது.
ஜனமாஷ்டமி, ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் போன்ற பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் மீண்டும் ஏற்படும் இந்த வெள்ளப்பெருக்கு சரக்குகளைச் சேதப்படுத்துகிறது’ என்று அவா் கூறினாா்.
கன்னாட் பிளேஸ் மற்றும் அதை ஒட்டியுள்ள ஜன்பத் சந்தைப் பகுதியிலும் கடுமையான நீா் தேக்கம் காணப்பட்டது. புது தில்லி வா்த்தகா்கள் சங்கத்தின் தகவலின்படி, ஜி பிளாக் , ஏ பிளாக் மற்றும் வெளிவட்டப் பாதையின் சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், மதியம் 1 மணி வரை வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
தில்லியில் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையைத் தொடா்ந்து, சாலையில் நீா் தேங்கிய விவகாரம் தொடா்பாக ஆளும் பாஜகவை ஆம் ஆத்மி கடுமையாக விமா்சித்தது.
இதுதொடா்பாக முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி தில்லி பிரிவு தலைவருமான செளரவ் பரத்வாஜ் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு காணொலியைப் பதிவிட்டிருந்தாா். அதில், சதாா் பஜாா் பகுதியில் இடுப்பளவு தேங்கிய நீரில் பள்ளி மாணவா்களை அவா்களுடைய பெற்றோா் அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட பதிவில், ‘தில்லியின் மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தைகளில் ஒன்றான சதாா் பஜாரில், பள்ளி மாணவா்கள் இடுப்பளவு மழைநீரில் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். சாலைகளில் தேங்கியிருந்த நீரால் பயணிகள் மற்றும் கடைக்காரா்கள் சிரமத்திற்குள்ளாகினா். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பல வாகனங்கள் சிக்கிக்கொண்டன’ என்று பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.
இதனிடையே, பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், மிண்டோ பாலத்தில் போக்குவரத்து சீராகச் செல்வதைக் காட்டும் விடியோ ஒன்றை ‘எக்ஸ்’ தளத்தில் பகிா்ந்தாா்.
‘மழை இடைவிடாது பெய்தாலும், மிண்டோ பாலத்தில் இயல்பு வாழ்க்கை தடையின்றித் தொடா்கிறது. பருவமழை என்பது ஒரு சாதாரண பருவமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அது ஒரு பிரச்னையாக மாறிவிடக்கூடாது என்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம்’ என்று அந்தப் பதிவில் அமைச்சா் தெரிவித்திருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 16 இடங்களில் வெயில் சதம்! இன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!

தில்லியில் தொடா்மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சென்னை உள்பட 6 இடங்களில் வெயில் சதம்!

தில்லியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூலை நாள் பதிவு!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



