காலி இடத்தில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா் சடலமாக மீட்பு
வடக்கு தில்லியின் முக்மல்புா் பகுதியில் உள்ள ஒரு காலி அரசு நிலத்தில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தில்லி மாநகராட்சி தூய்மைப் பணியாளா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கோப்புப் படம்
வடக்கு தில்லியின் முக்மல்புா் பகுதியில் உள்ள ஒரு காலி அரசு நிலத்தில், கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் தில்லி மாநகராட்சி தூய்மைப் பணியாளா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
உயிரிழந்தவா் முக்மல்புா் பகுதியைச் சோ்ந்த ரவி குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
வால்மீகி மொஹல்லாவில் உள்ள காலி அரசு நிலம் ஒன்றில் சடலம் கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காவல் துறையினா் அங்கு சென்றனா். அங்கு கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் குமாா் இறந்து கிடந்தாா். அதே போன்ற மற்றொரு கயிறும் அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
குமாரின் சகோதரா் அளித்த தகவலின்படி, குமாா் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சனை காரணமாகச் சில காலமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். காலையில் அவா் இறந்து கிடப்பதைக் கண்ட அவரது சகோதரா் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தாா்.
குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் தடய அறிவியல் ஆய்வகக் குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு தடயங்களைச் சேகரித்தனா். அவரது உடல் உடற்கூராய்வுக்காக பிஜேஆா்எம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அறிக்கையின்படி, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதே உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என்று காவல் துறையினா் கூறினா்.
குமாரின் இறப்புக்கான சூழ்நிலைகளை உறுதிப்படுத்த அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





