வரலாற்றுப் பிழையாகி விட்டதோ வண்ணார்பேட்டை மேம்பாலம்?

திருநெல்வேலி, ஆக. 11: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் |16.40 கோடியில் மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படாதது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.  வண்ணார்பேட்டை செல்லப்பாண்
Updated on
2 min read

திருநெல்வேலி, ஆக. 11: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் |16.40 கோடியில் மேம்பாலம் கட்டியும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படாதது பொதுமக்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

 வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானாவில் கிழக்கு-மேற்காக செல்லும் வாகனங்களே அதிகம் உள்ள நிலையில், சில தனிநபர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலத்தை வடக்கு-தெற்காக அமைத்ததே பிரச்னை தீராததற்கு காரணம் என பரவலான கருத்தாக உள்ளது.

 திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு வந்த பின்பு இங்கு புறவழிச்சாலையும், திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையும் சந்திக்கும் செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானா சந்திப்பு முக்கியமான பகுதியாக மாறிவிட்டது. மாநகர் பகுதியில் மற்ற இடங்களை ஒப்பிடும்போது இங்கு வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்து வந்தது.

 காலை, மாலை நேரங்களில் இந்த சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் இங்கு மேம்பாலம் அமைத்தால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என அனைவரும் கருதினர்.

 17.6.2007-ல் திருநெல்வேலிக்கு வந்திருந்த முதல்வர் கருணாநிதி பங்கேற்ற அரசு விழாவில், வண்ணார்பேட்டையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என மேயர் அ.லெ. சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார். மேயரின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், மேம்பாலம் கட்டப்படும் என்றும் அதற்கு செல்லப்பாண்டியன் பெயர் சூட்டப்படும் என்றும் அதே விழாவில் அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தார்.

 18.2.2008-ல் அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேம்பாலம் கட்டும் பணிகள் 27.2.2009-ல் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட வேண்டிய இந்த பாலத்தை 17 மாதங்களில் கட்டி முடித்துள்ளனர். பாலத்தை கடந்த 6-ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

 வண்ணார்பேட்டையில் மேம்பாலம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்த உடனேயே பாலத்தை கிழக்கு-மேற்காக கட்டுவதா அல்லது வடக்கு-தெற்காக கட்டுவதா என அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் வாகனப் போக்குவரத்தை கணக்கிட்டனர்.

 அதில், செல்லப்பாண்டியன் சிலை ரவுண்டானாவை போக்குவரத்து மிகுந்த காலை, மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்தில்  சராசரியாக 16 ஆயிரம் வாகனங்கள் கடப்பது தெரிய வந்தது.

 ஆய்வில் கிழக்கு-மேற்காக உள்ள திருவனந்தபுரம் சாலையில் 12 ஆயிரம் வாகனங்களும், வடக்கு-தெற்காக உள்ள மதுரை-நாகர்கோவில் சாலையில் 4 ஆயிரம் வாகனங்களும் செல்வது தெரிய வந்தது. ஆதலால், அதிக வாகனப் போக்குவரத்து உள்ள திருவனந்தபுரம் சாலையில் கிழக்கு-மேற்காக பாலத்தை கட்டுவதே பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் என மாநகர போக்குவரத்து காவல் துறையினர் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், பாலத்தை வடக்கு-தெற்காக கட்டுவதற்கான முயற்சிகள் பல்வேறு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பாமகவினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் எதுவும் எடுபடவில்லை.

 பாலத்தை கிழக்கு-மேற்காக கட்டுவதானால் திருவனந்தபுரம் சாலையில் இருபுறமும் உள்ள தனியார் வணிக கட்டடங்களை இடிக்க வேண்டியது வரும். மேலும் சுமார் 3,790 சதுர அடி நிலம் தனியாரிடமிருந்து கையகப்படுத்த வேண்டும். நிலத்தையும், கட்டடத்தையும் இழக்க விரும்பாத தனி நபர்கள் நீதிமன்றம் செல்லக் கூடும். அதனால் பாலம் கேள்விக்குறியாகி விடும். ஆதலால், சிக்கல் இல்லாமல் பாலத்தை கட்ட வேண்டுமானால் அதை வடக்கு-தெற்காக கட்டுவதே வழி என மாநகராட்சி நிர்வாகிகள் அரசுக்கு கருத்து தெரிவித்தனர்.

 அதுமட்டுமின்றி, தென் மாவட்டங்களில் உள்ள புறவழிச்சாலைகள் எல்லாம் வடக்கு-தெற்காக உள்ளன. வண்ணார்பேட்டை பாலமும் புறவழிச்சாலையில்தான் வருகிறது. ஆதலால் மாநகராட்சி நிர்வாகம் சொல்கிறபடி பாலத்தை வடக்கு-தெற்காக கட்டுவதே சரி என்ற வகையில் சென்னையில் உள்ள மாநில நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளும் முடிவு செய்துவிட்டனர். ஆனால் இங்குள்ள நிலைமை வேறு, இங்கு வாகனப் போக்குவரத்து கிழக்க-மேற்காகத்தான் அதிகமாக இருக்கிறது. எனவே, போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வுகாண பாலத்தை கிழக்கு-மேற்காகத்தான் கட்ட வேண்டும், மூன்றில் ஒரு பங்கு வாகனப் போக்குவரத்து உள்ள வடக்கு-தெற்காக கட்டினால் பயன் ஏற்படாது என உள்ளூர் அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படாததாலும், காவல் துறை எடுத்த கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்கள் முறையாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்கப்படாததும் பாலம் வடக்கு-தெற்காக அமைய காரணமாகி விட்டது என தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.

 இதையெல்லாம்விட, திருவனந்தபுரம் சாலையில் உள்ள சில தனியார் நிறுவனங்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில்தான் பாலத்தை கிழக்கு-மேற்காக கட்டாமல் வடக்கு-தெற்காக கட்டி வரலாற்று பிழை செய்துவிட்டனர் என்ற வருத்தம் பரவலாக உள்ளது. எப்படியோ பாலம் கட்டி திறந்தாகி விட்டது.

 பாலம் கட்டி திறக்கப்பட்டாலும் வண்ணார்பேட்டை சந்திப்பு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படாது என தொடர்ந்து கூறி வந்தவர்களின் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்தான் தற்போதைய நிலை உள்ளது.

 வண்ணார்பேட்டையை கடந்து எல்லா திசைகளிலும் வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியவில்லை. "தலையை சுற்றி மூக்கை தொடும்' வகையில் சுற்றி செல்ல வேண்டியதும் உள்ளது.

முன்பு ரவுண்டானா சந்திப்பில் தேங்கிய வாகனங்கள் இப்போது நான்கு பக்கமும் "யு' திருப்பம் உள்ள இடங்களில் தேங்குகின்றன. அங்கும் அச்சத்தின் பிடியில்தான் வாகனத்தை நகர்த்த வேண்டியது உள்ளது. அதிகாரிகளும் நாள்தோறும் ஏதேதோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்றைக்கு நிலைமை சரியாகும் எனத் தெரியவில்லை. ஆக, மொத்தத்தில் தனிநபர்களின் நலனைக் காக்க, பொதுமக்கள் பணம் | 16.40 கோடியில் ஒரு வரலாற்று பிழை நிகழ்ந்து விட்டது என்று மக்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com