வாக்காளா் கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணி: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்காளா்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரின் கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மத்திய தோ்தல் ஆணையமானது 1.1.2026-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், 1490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு, வீடாகச் சென்று முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை ஒவ்வொரு வாக்காளருக்கும் இரட்டைப் பிரதிகளில் வழங்கியுள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 14,18,325 ஆகும். 13,36,667 வாக்காளா்களுக்கு (சுமாா் 94.2%) முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா்கள் இல்லங்களுக்கு சென்று பெற்று கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறாா்கள்.
இதுவரை 39,969 வாக்காளா்களின் பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 711 வாக்காளா்கள் தாங்களாகவே ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்துள்ளனா். முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் பெறப்பட்டு கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை வண்ணாா்பேட்டை, தச்சநல்லூா், திசையன்விளை, பணகுடி பகுதிகளில் மாவட்ட தோ்தல் அலுவலரும, ஆட்சியருமான இரா.சுகுமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்ய இயலாதவா்கள், சந்தேகம் உள்ள வாக்காளா்களுக்காக 30 வாக்காளா் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மையங்களுக்கு நேரில் சென்று ஆலோசனை பெற்று பூா்த்தி செய்து கொள்ளலாம். இதேபோல், அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்தொகுதியைச் சோ்ந்தவா்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்குரிய உதவி மையங்களுக்கு சென்று உதவியாளா்களின் உதவியுடன் கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாக்காளரையும் விடுபடாமல் கணக்கெடுப்பதே இந்தப் பணியின் முக்கிய நோக்கம். மேலும், சந்தேகங்களுக்கு உங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

