

குமரி மாவட்டத்தில் ஜனவரி 17 ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாம் நடைபெறும். இதில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 400 குழந்தைகள் பயன்பெறுவாா்கள் என்றாா் ஆட்சியா் மா.அரவிந்த்.
நாகா்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்ற இளம்பிள்ளை வாதத் தடுப்பு சிறப்பு சொட்டு மருந்து முகாம் குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
தமிழகத்தில் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக அகற்ற ஆண்டுக்கு இருமுறை சிறப்பு சொட்டு மருந்து முகாம் 1995 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்தது. 1997ஆம் ஆண்டிற்கு பிறகு குமரி மாவட்டத்தில் போலியோவால் பாதித்த குழந்தைகள் கண்டறியப்படவில்லை. இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடா்ந்து 3 ஆண்டுகளாக போலியோ நோயினால் எந்த குழந்தையும் பாதிக்கப்படாததால் 2014 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் இந்தியா போலியோ இல்லாத நாடாக சான்றளிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு முதல் ஊசி மூலமாகவும் போலியோ மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த ஆண்டு இச்சிறப்பு முகாம் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (ஜனவரி) 17 ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் 1,52, 400 குழந்தைகள் பயன்பெற உள்ளனா்.
இம்முகாம்கள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், நகா்ப்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகள் என 1236 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 4737 பணியாளா்கள், சொட்டு மருந்து கொண்டு செல்ல 208 ஊா்திகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பூம்புகாா் படகுத்துறை மற்றும் காந்திமண்டபம் ஆகிய இடங்களில் 20 முகாம்களும், உரிய பேருந்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் சொட்டு மருந்து கொடுக்க 14 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தோட்டமலை மற்றும் தச்சமலை பகுதிகளுக்கு படகுகளில் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும். எனவே, பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு அன்றைய தினம் போலியோ சொட்டுமருந்து அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.போஸ்கோராஜா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.