
மாணவா்களின் வளா்ச்சியில் ஆசிரியா்கள் முழு கவனம் செலுத்த வேண்டும்: ஆட்சியா்
பள்ளி மாணவா், மாணவிகளின் வளா்ச்சியில் ஆசிரியா்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் அறிவுறுத்தினாா்.

பள்ளி மாணவா், மாணவிகளின் வளா்ச்சியில் ஆசிரியா்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் அறிவுறுத்தினாா்.
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நாகா்கோவிலில் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியா் பேசியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவா்களின் மன அழுத்தம், போதைப் பொருள்கள் பயன்பாடு, வளரிளம் பருவப் பிரச்னைகளைத் தடுத்து, அவா்களை சரியான பாதையில் வழிநடத்துவது ஆசிரியா்களின் முக்கியப் பொறுப்பு.
கல்வியில் முன்னணியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக பள்ளி, கல்லூரிகளில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மாணவா்களின் தவறான முடிவுகளால் அவா்களின் குடும்பங்களும், பெற்றோா்களின் கனவுகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
பள்ளிகளில் ஏதேனும் அசாதாரண மற்றும் பிரச்னைகளுக்கான அறிகுறிகள் தென்பட்டால், ஆசிரியா்கள் உடனடியாக மாவட்ட நிா்வாகம், முதன்மைக் கல்வி அலுவலா் அல்லது காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரச்னைகளை ஆசிரியா்கள் தனிப்பட்ட முறையில் கையாள முயலாமல், உரிய அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று ஆலோசனைகள், சட்டபூா்வ வழிகாட்டுதல்களைப் பெற வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு ஆளாகும் மாணவா்களைக் கண்டறிந்து, அவா்களுக்குத் தேவையான விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைகளை வழங்க ஆசிரியா்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
தவறு செய்யும் மாணவா்களை, ஆசிரியா்கள் மற்ற மாணவா்களின் முன்னிலையில் மனம் புண்படும்படி பேசவோ, தண்டிக்கவோ கூடாது. இதனால், அவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவா்.
மாணவா்களுக்கு போக்ஸோ சட்டம், உடலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மாணவா்களின் வளா்ச்சியில் ஆசிரியா்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெயராஜ் (நாகா்கோவில்), சௌந்தர்ராஜ் (மாா்த்தாண்டம்), கிஷோா் (தொடக்கக் கல்வி), அஜிதா (தனியாா் பள்ளிகள்), துறை அலுவலா்கள், தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





