
குமரி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கடல் சீற்றம்: கடல் பகுதிக்குச் செல்லத் தடை

குமரியில் கடல் சீற்றம். - கோப்புப் படம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 2ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்; சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், குடியிருப்புப் பகுதிகளுக்குள் கடல் நீா் புகுந்தது. வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கியிருந்த கடல் நீா் மின் மோட்டாா்கள் மூலம் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அழிக்கால், பிள்ளைத்தோப்பு, ராஜாக்கமங்கலம் துறை, பூத்துறை, வள்ளவிளை, இரயுமன் துறை, கேசவன் புத்தன் துறை ஆகிய பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து சென்றன. இதன் காரணமாக பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
லெமூா் கடற்கரை பகுதியிலும் கடல் சீற்றம் இருந்தது. இதனால், கடல் பகுதிகளுக்குச் செல்ல திங்கள்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், சொத்தவிளை, சங்குத் துறை, குளச்சல், முட்டம் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






