புத்தகம் படித்தால் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் ஆகியவற்றின் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் "நெல்லை புத்தகத் திருவிழா' நடைபெற்று வருகிறது. இதில் கலைநிகழ்ச்சிகளின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேசியதாவது: திருநெல்வேலியில் புத்தகத் திருவிழாவை கடந்த ஆண்டே நடத்த வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், முடியவில்லை. 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இங்கு 110 அரங்குகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி, சித்த மருத்துவக் கல்லூரி சார்பில் மூலிகைக் கண்காட்சி அரங்கம், தூய்மை இந்தியா திட்டம் குறித்த அரங்கம், திருநெல்வேலி மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் அரங்கம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் "சுத்தம் புத்தகம் தரும்' என்ற தலைப்பில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளன.
மாணவர்களும், இளைஞர்களும் ஆன்லைனில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து வாசிக்கிறார்கள். புத்தகத்தை கையில் பிடித்து படிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி கணினி, செல்லிடப்பேசியில் படிக்கும்போது கிடைக்காது.
புத்தகம் படிப்பதால் மனதுக்கு உடற்பயிற்சி செய்தது போன்ற புத்துணர்ச்சி கிடைக்கும். எனவே, அனைவரும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அரசுத் துறை அதிகாரிகள் தங்கள் குடும்பத்துடன் புத்தகத் திருவிழாவுக்கு வந்து புத்தகங்களை வாங்கி பயனடைய வேண்டும் என்றார்.
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. அறிவுக்கு செய்யும் செலவு மூலதனமே. அது செலவல்ல. அறிவுக் கண்ணை திறப்பது நல்ல நூல்கள்தான். தினமும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். படிப்புதான் மனிதனை உயர்த்தும். புத்தகம் படிப்பதால் தனி உற்சாகம் பிறக்கும். எப்போதும் சிரித்த முகத்தோடு, சிந்தனை தெளிவோடு இருக்க முடியும். வாழ்க்கை உயரும். புத்தகம் நமது வெற்றியின் திறவுகோல் என்றார்.
திருநெல்வேலியின் பெருமையை எடுத்துரைக்கும் நெல்லை கீதம் என்ற பாடலுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் நடமானடினர்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) இளம்பகவத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, நேஷனல் புக் டிரஸ்ட் மாநில திட்ட மேலாளர் மதன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.