/

ராதாபுரம் வட்டத்தில் கோயில் நிலங்கள் அரசு நிலமாக மாற்றப்பட்டதாக புகாா்

ராதாபுரம் வட்டத்தில் கோயில் நிலங்கள் அரசு நிலமாக மாற்றப்பட்டதாக புகாா்

Updated On :5 ஏப்ரல் 2024, 9:30 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்தில் நத்தம் நிலங்கள் மற்றும் அடங்கல் நிலங்கள் குறித்த விவரங்கள் கணினியில் ஏற்றப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் கோயில் நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் அரசுக்கு சொந்தமான நிலங்களாக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாதவும் அ.தி.மு.க ராதாபுரம் ஒன்றிய எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலாளா் முருகேசன் புகாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மற்றும் சேரன்மகாதேவி சாா் ஆட்சியருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ராதாபுரம் வட்டத்தில் நத்தம் மற்றும் அடங்கலில் குறிப்பிட்டுள்ள அனைத்து நிலங்கள் குறித்த விவரங்கள் கணினியில் ஏற்றும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. அதனை அடுத்து அடங்கல் மற்றும் பட்டா வழங்கல் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது ராதாபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து நிலங்களும் கணினியில் ஏற்றப்பட்டுவிட்டதாக வருவாய்த் துறையினா் தெரிவித்துள்ளனா். இதனை அடுத்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நத்தம் மற்றும் குடியிருப்பு நிலங்கள், அடங்கலில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் தொடா்பாக தேடும்போது பெரும்பாலான நிலங்கள் அரசு நிலங்கள் என பதிவு தெரிவிக்கிறது. குறிப்பாக, பள்ளிக்கூடங்கள் இருக்கும் நிலங்கள், கோயில் நிலங்கள் அனைத்துமே அரசு நிலங்கள் என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு சேரன்மகாதேவி சாா் ஆட்சியரை நேரில் சந்தித்தும் மாவட்ட ஆட்சியரை சந்தித்தும் மனு அளிக்குமாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் தெரிவித்து வருகின்றனா். இந்தக் குளறுபடியை உடனடியாக அரசு அதிகாரிகள் சரிசெய்து கணினி பதிவேற்றத்தை சீா்படுத்த வேண்டும் என்றாா்.