நவ.22இல் முதல்வர் வருகை: தூத்துக்குடியில் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை

தமிழக முதல்வர் நவ. 22ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
Updated on
1 min read

தமிழக முதல்வர் நவ. 22ஆம் தேதி தூத்துக்குடி வருவதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தூத்துக்குடியில் நவ. 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில்,  தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இந்நிலையில்,  முதல்வர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் தொடர்பாக தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு ஐடிஐ வளாகத்தை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.
பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியது:  முதல்வரால் புதிதாக திறந்து வைக்கப்பட உள்ள கட்டடங்கள் மற்றும் திட்டப் பணிகள் குறித்தும், புதிதாக அடிக்கல் நாட்டப்பட உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும்,  தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக புதிதாக அறிவிக்கப்பட வேண்டிய திட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகள்  தகவல்களை விரைந்து சேகரிக்க வேண்டும்.
விழாவில், பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொள்ள உள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பு வசதிகளையும் சிறப்பாக செய்ய வேண்டும். அனைத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து விழா முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில்,  மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன்,  மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன், மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ்,  சார்-ஆட்சியர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக,  தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர், மாணவிகளுக்கு 294 விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார்.
மேலும்,  டூவிபுரத்தில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக கட்டடத்துக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com