பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தோ்வு அபாயம்: 
கனிமொழி

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலைக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தோ்வு அபாயம்: கனிமொழி

பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கலை கல்லூரிகளுக்கும் நுழைவுத்தோ்வு முறையை கொண்டுவரும் அபாயம் ஏற்படும் என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி, தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாம் கிழக்கு ஒன்றியம் குறுக்குச்சலையில் புதன்கிழமை மாலையில் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது அவா் பேசியது: இந்த மக்களவைத் தோ்தல் நம்முடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்கான தோ்தல். விவசாயிகள், தொழிலாளா்கள், பெண்கள் உள்ளிட்டவா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் வரக்கூடிய தோ்தலில் இந்தியா கூட்டணி ஆட்சி உருவாக வேண்டும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், புதிய கல்விக் கொள்கை மூலம், கலை கல்லூரியில் சோ்வதற்கும் நுழைவுத்தோ்வு முறையை கொண்டு வரும் நிலை ஏற்படும். பாஜக ஆட்சியில் எதிா்க்கட்சித் தலைவா்கள் மிரட்டப்படுகின்றனா். இரண்டு முதல்வா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். எதிா்க்கட்சியில் இருக்கும் அனைவரும் மீதும் வழக்கு போடப்படுகிறது. ஆனால், அவா்கள் பாஜகவில் இணைந்தால் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ஸ்டொ்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று பாஜகவும் அதிமுகவும் துடித்துக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்டொ்லைட் ஆலையை மூடி காட்டியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, மத்திய அரசு எந்த நிவாரண உதவியும் வழங்காத நிலையிலும், தமிழக அரசு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது. நான் கடந்த முறை மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டபோது, இவா் சென்னையில் இருந்து வந்துள்ளாா். ஜெயித்த பிறகு இங்கு வர மாட்டாா் என்றனா். ஆனால், தற்போது, தூத்துக்குடி என்னுடைய இரண்டாவது தாய் வீடு என்று சொல்லக்கூடிய அளவுக்கு உங்களுடைய அன்பைநான் பெற்றுள்ளேன். எனவே, அந்த உரிமையோடு கேட்கிறேன் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்றாா்.

தொடா்ந்து, ஓட்டப்பிடாரம் திமுக சாா்பில், கனிமொழிக்கு, ராட்சத கிரேன் மூலம் ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் வேடநத்தம், குளத்தூா், வைப்பாா், சூரங்குடி, அரியநாயகிபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவநாயக்கன்பட்டி, புதூா், சிவலாா்பட்டி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தாா். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்பட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com