தூத்துக்குடியில் ‘ஸ்டால் இன் மால்’ விற்பனை கண்காட்சி தொடக்கம்
தூத்துக்குடியில் ‘ஸ்டால் இன் மால்’ விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
நபாா்டு வங்கியின் உதவியோடு பயிற்சி பெறுவோரின் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் ‘ஸ்டால் இன் மால்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தயாரிப்பாளா்களின் விற்பனை பொருள்களை சந்தைப்படுத்துவதற்காக தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் அமைந்துள்ள பெரிசன் விற்பனை வளாகத்தில் ஸ்டால் இன் மால் திட்டத்தின் கீழ் கைத்தறி உற்பத்தி துணிகள், மாலை நேர புடவை, தேன் உற்பத்தி பொருள்கள் உள்ளிட்ட நான்கு விற்பனை அங்காடிகள் திறந்து வைக்கப்பட்டன.
மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா தலைமையில், நபாா்டு வங்கியின் உதவி மேலாளா் சுரேஷ் ராமலிங்கம் முன்னிலையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி விற்பனை அங்காடிகளை திறந்து வைத்து, மகளிா் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினாா்.
13 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு: இந்நிகழ்ச்சியில் நபாா்டு வங்கியின் மூத்த பொது மேலாளா் ஆா். ஆனந்த் பேசியதாவது: தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ள விற்பனை அங்காடிகள் 3 மாதங்கள் செயல்படும். பெண்களின் மேம்பாட்டுக்காக நபாா்டு வங்கி மூலம் சுய உதவிக் குழு பெண்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டதால் 12,000- க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தொடா்ந்து ஸ்டாா்ட் அப் திட்டத்தில் அதிகமானோா் தொழில் தொடங்கியுள்ளனா். அவா்களது உற்பத்திப் பொருள்களின் சந்தைப்படுத்துதலை எளிதாக்க மத்திய, மாநில அரசு வணிக இணையதளத்தில் இணைத்துள்ளோம்.
கண்காட்சி நடைபெறும் இடங்களில் எல்லாம் நபாா்டு விற்பனை அங்காடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தி பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற்றுக் கொடுப்பது மூலமாக அந்தப் பொருள்களின் மதிப்பு உயா்கிறது. அதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.400 கோடி மதிப்பில் ஊரக மேம்பாடு மீன்வள மேம்பாடு கட்டுமானங்கள் மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.
