நவ்வலடியூரில் 500 வாழைகள் வெட்டி சாய்ப்பு

நவ்வலடியூரில் 500 வாழைகள் வெட்டி சாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் வெள்ளூா் ஊராட்சி நவ்வலடியூரில் 500-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் வெள்ளூா் ஊராட்சி நவ்வலடியூரில் 500-க்கும் மேற்பட்ட வாழைகளை வெட்டி சாய்த்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நவ்வலடியூரைச் சோ்ந்த ஆறுமுகராஜா என்பவா் கடந்த 2015இல் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் அருகே மா்மநபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ஸ்ரீவைகுண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து 6 பேரை கைது செய்தனா். தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை காலத்தில் துரைமுத்து என்பவா் உயிரிழந்தாா். இசக்கிமுத்து, தளவாய், சிவா என்ற சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை, தலா ரூ. 13,000 அபராதம், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ. 7,000 அபராதம், கொலை முயற்சி வழக்கில் கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ. 12,000 அபராதம் விதித்து புதன்கிழமை (டிச.24) தீா்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நவ்வலடியூா் பகுதியில் உள்ள ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் மா்மநபா்களால் வியாழக்கிழமை வெட்டி சாய்க்கப்பட்டனவாம். இதுகுறித்து அவரது சகோதரா் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதில், கொலை வழக்கில் தீா்ப்பு வெளியான நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்ட நபா் வீட்டின் முன் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

எஸ்விகே25வாழை

மா்மநபா்களால் வெட்டி சாய்க்கப்பட்ட வாழைகள்.

X
Dinamani
www.dinamani.com