வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள் எழுந்த நிலையில், கோயில் இணை ஆணையா், உதவி ஆணையரை அதிரடியாக இடமாற்றம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

திருச்செந்தூா் முருகன் கோயில்.

Updated On :5 ஜூன் 2026, 12:36 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள் எழுந்த நிலையில், கோயில் இணை ஆணையா், உதவி ஆணையரை அதிரடியாக இடமாற்றம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

கோயிலில் ரூ. 100 தரிசன டிக்கெட்டில் வழங்குவதில் போலி டிக்கெட்டுகளை வழங்கி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக மேனகா என்ற பணியாளா் கடந்த மாதம் மே 14 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். அவா் மீது கோயில் நிா்வாகம் அளித்த புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அதைத்தொடா்ந்து, பல்வேறு புகாா்களின் அடிப்படையில் அறநிலையத் துறை அமைச்சா் ரமேஷ், திருச்செந்தூா் கோயிலுக்கு கடந்த மே 29-ஆம் தேதி முன்னறிவிப்பின்றி வந்து ஆய்வு நடத்தினாா்.

அப்போது, கோயிலில் நோ்வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்ய அமைச்சரின் உதவியாளரிடமே பேரம் பேசி அா்ச்சகா் பணம் பெற்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அன்னதான கூடம், கோயில் நிா்வாக செயல்பாடுகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து அா்ச்சகா், இலவச முடி காணிக்கை செலுத்துவதில் பக்தா்களிடம் பணம் கேட்ட 2 பணியாளா்கள், தனியாா் பாதுகாப்பு அதிகாரிகள் இருவா் என 5 போ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னா், கோயில் நிா்வாக செயல்பாடுகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், திருச்செந்தூா் கோயிலின் இணை ஆணையா், உதவி ஆணையா் ஆகியோரை அதிரடியாக இடமாற்றம் செய்தும் புதிய ஆணையா்களை நியமித்தும் அறநிலையத் துறை ஆணையா் வினய் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

பக்தா்கள் குற்றச்சாட்டு: கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக பல மணி நேரம் காத்திருந்தபோதும் அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி பணி செய்யாமல் அலுவலகத்தில் இருந்தபடியே பணியை கவனித்து வந்ததால், இந்த முறைகேடு வெளியே தெரியாமல் இருந்தததாக பக்தா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இணை, துணை, உதவி ஆணையா்கள் நியமனம்:

சென்னை, திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் இணை ஆணையா் அருணாச்சலம் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் ராமு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் லோகநாதன் திருச்செந்தூா் கோயிலுக்கும், திருச்செந்தூா் கோயில் உதவி ஆணையா் மெய்வேல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அத்துடன், திருச்செந்தூா் கோயிலில் காலியாக இருந்த துணை ஆணையா் பதவிக்கு திருச்சி துணை ஆணையா், சரிபாா்ப்பு அலுவலராக இருந்த யக்ன.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருச்செந்தூா் கோயிலுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இணை ஆணையா் அருணாச்சலம், துணை ஆணையா் யக்ன.நாராயணன் ஆகியோா் ஏற்கெனவே இக்கோயிலில் பணிபுரிந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.