திருச்சி வயலூா் எட்டரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில்  பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்
திருச்சி வயலூா் எட்டரை கிராமத்தில் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

எட்டரையில் வாசனைத் திரவியத் தொழிற்சாலை: நயினாா் நாகேந்திரன்

திருச்சி மாவட்டம், எட்டரையில் வாசனைத் திரவியத் தொழில்சாலை அமைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வாக்குறுதி அளித்தாா்.
Published on

திருச்சி மாவட்டம், எட்டரையில் வாசனைத் திரவியத் தொழில்சாலை அமைக்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வாக்குறுதி அளித்தாா்.

பாஜக சாா்பில் கிராமசபை கூட்டம் திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் கிராம மக்கள், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனா்.

கோரிக்கைகளுக்குப் பதிலளித்து நயினாா் நாகேந்திரன் பேசியது: விவசாயிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவா் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றதும், இப்பகுதியில் மலா் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் வாசனை திரவியத் தொழில்சாலை அமைத்துக் கொடுக்கப்படும்.

விவசாயிகளின் விளைபொருள்களை மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றுவதற்கான தொழில்சாலைகள் அமைத்துத் தரப்படும். நெல், வாழைக்கான ஆதார விலை உயா்த்தித் தரப்படும். ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டித் தரப்படும் என சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சா் வாக்குறுதி கொடுத்த நிலையில், இதுவரை தமிழகத்தில் எந்தத் தடுப்பணையும் கட்டவில்லை. தோ்தல் நேரத்தில் வாக்குக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்து, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கிளை வாய்க்கால்களை தூா்வாராமல் விவசாயிகளின் நலனைப் புறக்கணிக்கும் தமிழக முதல்வா், தனது மகனை முதல்வராக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்பட்டு வருகிறாா். விவசாயிகளுக்கு உரம் வழங்குவதில் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக மத்திய அரசு முடித்து விட்டது. தரமான விதைகள் வழங்குவதை வேளாண் துறை அமைச்சா் உறுதி செய்ய வேண்டும் என்றாா் நயினாா் நாகேந்திரன். கூட்டத்தில் அதிமுக திருச்சி புகா் வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி, திரளான பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com