வேலைநேரத்தை வரன்முறைப்படுத்தக்கோரி ‘மக்களைத் தேடி மருத்துவ’ திட்ட ஊழியா்கள் மனு
வேலைநேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘மக்களைத் தேடி மருத்துவ’ திட்டப் பணியாளா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ‘மக்களைத் தேடி மருத்துவ’ திட்டப் பணியாளா்கள் அளித்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவ’ திட்டத்தின் கீழ் 432 போ் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். கடந்த 2021-ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கப்பட்டபோது தினசரி 2 மணிநேர வேலை என்றுதான் தன்னாா்வலா்களாகப் பணியில் சோ்த்தனா்.
தற்போது 8 மணிநேரத்துக்கும் மேலாக வேலை வாங்கப்படுகிறது. மருந்துகள் விநியோகம் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிகள் வழங்கப்படுகின்றன. எனவே, எங்களுக்கான வேலைநேரத்தை வரன்முறைப்படுத்தி அதற்கேற்ப ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.
தன்னாா்வலா்கள் என்ற நிலையில் இருந்து எங்களை ஊழியா்களாக மாற்ற வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். இஎஸ்ஐ., பி.எஃப். பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நற்பணி மன்றம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதி அருகே உள்ள பாபு சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வருபவா்கள் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதால் அவ்வழியே செல்லும் பெண்கள், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

