திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
திருவெறும்பூரில் ரூ. 6.10 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் சனிக்கிழமை தொடங்கிவைத்தனா்.
திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு வளா்ந்துவரும் பகுதியாக மாறியுள்ள திருவெறும்பூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசின் 6ஆவது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.6.10 கோடி ஒதுக்கி, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை மூலம் நடைபெறும் பணிகளை அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இப் பேருந்து நிலையமானது 10 பேருந்து நிறுத்தங்கள், 16 கடைகள், காவல் அறை, போக்குவரத்துக் கழக அறை, நேரக்காப்பாளா் அறை, தாய்மாா்கள் அறை, ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, 24 இருக்கைகள், 24 சிசிடிவி கேமரா, 20 தீயணைப்பான், ஒரு ஆழ்துளைக் கிணறு, பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் 2,430 சதுர மீட்டரில் கட்டப்படுகிறது. இதில் பயணிகள் வரும் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 349 சதுர மீட்டரில் பேவா் பிளாக் தரை அமைக்கப்படுகிறது. பேருந்து நிறுத்தும் பகுதிகளில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலகம்: மரக்கடை சையது முதுா்சா பள்ளியில் 1991ஆம்ஆண்டு முதல் இயங்கிவந்த திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமானது, ராஜா காலனியில் உள்ள புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா்.
மாணவா்களுக்கு மடிக் கணினி: இதேபோல பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா். பல்வேறு துறைகளைச் சோ்ந்த 540 மாணவ, மாணவிகள் மடிக்கணினிகளை பெற்றனா். இதேபோல, குமுளுரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சா் கே.என். நேரு, இறுதியாண்டு பயிலும் 232 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
நிகழ்வுகளில் ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், அண்ணா பல்கலைக் கழக கல்லூரி முதல்வா் த. செந்தில்குமாா், அரசுக் கல்லூரி முதல்வா் த. ஜெயக்குமாா், மேயா் மு. அன்பழகன் மற்றும் எம்எல்ஏ-க்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

