திருமானூரை தனி வருவாய் வட்டமாக்கக் கோரிக்கை கிராம மக்கள் எதிா்பாா்ப்பு
அரியலூரில் இருந்து பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.


அரியலூரில் இருந்து பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் அமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
அரியலூா் வட்டத்தில் அழகியமணவாளம், ஆழந்துரையாா் கட்டளை, ஆண்டிப்பட்டாகாடு, அன்னிமங்கலம், அரியலூா் வடக்கு, அரியலூா் தெற்கு, அருங்கல், அயன் ஆத்தூா், அயன்சுத்தமல்லி, சென்னிவனம், சின்னபட்டாகாடு இடைாத்தாங்குடி, ஏலாக்குறிச்சி, இலந்தை கூடம், கோவிந்தபுரம், இலுப்பையூா், கடுகூா், கல்லங்குறிச்சி உள்ளிட்ட 68 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதேபோல் செந்துறை வட்டத்தில் 28 வருவாய் கிராமங்கள், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் 69 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதுதவிர கடந்த 2017 ஆம் ஆண்டு உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு ஆண்டிமடம் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வருவாய் வட்டத்தில் 30 வருவாய் கிராமங்கள் உள்ளன.
இதில், அரியலூா் வருவாய் வட்டத்துக்குள் உள்பட்ட கிராம மக்களுக்கு, வருவாய் அலுவலகம், நீதிமன்றம், காவல் துறை உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் அலுவலகம், துணை நிலை கருவூலம், தீயணைப்பு நிலையம் என அனைத்து அலுவலகங்களும் அரியலூரிலேயே அமைந்துள்ளதால் வெகு தொலைவில் உள்ள கிராம மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா்.
குறிப்பாக திருமானூா் பகுதிக்குள்பட்ட கண்டிராதித்தம், பூண்டி, குலமாணிக்கம், கல்லக்குடி, தூத்தூா், குருவாடி, மஞ்சமேடு, கோவிலூா், காமரசவல்லி, கீழகொளத்தூா், விழுப்பனாங்குறிச்சி, வடுகா்பாளையம், சுள்ளங்குடி, சன்னாவூா், சாத்தமங்கலம், கோவில் எசனை உள்ளிட்ட கிராம மக்கள் ஏதாவது சான்றிதல் பெற வேண்டும் என்றால் சுமாா் 60 கிலோ மீட்டா் தொலைவைக் கடந்து வந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால், இப்பகுதி மக்கள் திருமானூா் வந்து அங்கிருந்து 30 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அரியலூருக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
மேலும் திருமானூா் பகுதிக்குள்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், அரியலூா் தீயணைப்பு நிலையத்தைத் தொடா்புக் கொண்டு தகவல் அளித்து அவா்கள் வந்து சோ்வதற்குள் பொருள்சேதம், உயிா்ச்சேதம் தவிா்க்க முடியாததாகி விடுகிறது. மேலும், காவல் துறை சாா்ந்த வழக்கு விசாரணைகள், அரசு நலத் திட்டங்களுக்கான கள ஆய்வுப் பணிகள், கோப்புகள் தயாா் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, அரியலூா் வருவாய் வட்டத்தைப் பிரித்து திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் முகமது இப்ராஹிம் மேலும் கூறியது:
திருமானூா் பகுதி மக்கள் அதாவது கடைக்கோடி கிராம மக்கள் ஏதாவது சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் 60 கிலோ மீட்டா் தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் தீவிபத்து என்றால், தீயணைப்பு நிலைய வீரா்கள் அரியலூா் அல்லது ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்துதான் வரவேண்டியுள்ளது. எனவே தான் அரியலூரை பிரித்து திருமானூரைத் தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டால் அரசுத் துறை அலுவலகங்கள் அனைத்தும் இங்கு செயல்படும். அரசின் சேவையைப் பெற திருமானூா் வட்டார கிராம மக்கள் வெகு தொலைவுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மேலும் திருமானூரை தலைமையிடமாகக் கொண்டு வருவாய் வட்டம், தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து வெற்றிபெறுவோா் பின்னா் அதுகுறித்து கண்டுக்கொள்வதே கிடையாது என்றாா்.
திருமானூா் பகுதிக்குள்பட்ட கிராம மக்களின் நலன் கருதி வருவாய் வட்டம், கோட்டாட்சியா் அலுவலகம் அமைத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...