நாட்டுத் துப்பாக்கியை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடியவா் கைது

அரியலூா், மே 9: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நாட்டுத் துப்பாக்கி மற்றும் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பியோடிய நபா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஜெயங்கொண்டம் காவல் துறையைச் சோ்ந்த அன்புராஜ், ஜெயசீலன் ஆகியோா் கடந்த 1 ஆம் தேதி அதிகாலை தேவனூா், கல்வெட்டு, பிள்ளையாா் கோயில் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படியாக பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபரை மறித்தனா். ஆனால், அந்த நபா், ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மற்றும் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா்.

இதையடுத்து காவல் துறையினா், அவரது இருசக்கர வாகனம், நாட்டுத் துப்பாக்கி, அதற்கு பயன்படும் மருந்துப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

இதில், அவா் தேவனூா், கல்வெட்டு கிராமத்தைச் சோ்ந்த இளநீா் வியாபாரி குருசாமி மகன் செல்வம் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் அவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இவா் மீது ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டில் இதேபோல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com