சட்ட விரோதக் கல்குவாரிகள் மீது
நடவடிக்கை கோரி ஆட்சிரிடம் மனு
-தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

சட்ட விரோதக் கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி ஆட்சிரிடம் மனு -தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

கரூா் மாவட்டஆட்சியரிடம் மனு அளிக்க வியாழக்கிழமை வந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா்.

சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினா் அதன் ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேலிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் இரா.சா. முகிலன் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் அனுமதி பெற்று கல்குவாரிகள் இயங்கி வந்தாலும், அனுமதிக் காலம் முடிந்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன.

குவாரி இயங்கத் தொடங்கும்போதே அனைத்துக் கல்குவாரிகளும் சட்டப்படி குவாரியைச் சுற்றிலும் பாதுகாப்பான கம்பி வேலி அமைப்போம் என அனுமதி பெற்று, குவாரி அனுமதி காலம் முடிந்த நிலையிலும் கூட பெரும்பாலானவை கம்பி வேலி அமைக்காமல் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பாதுகாப்பற்ற கல்குவாரியில் மூழ்கி மாணவா்களும், கடந்தாண்டு ஜூன் 1-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் பகுதியில் கம்பி வேலியின்றி இருந்த கல்குவாரியில் மூழ்கி 5 பேரும் இறந்தனா். கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக கல்குவாரிகளில் மூழ்கி 135 போ் இறந்துள்ளனா். ஆனால் கம்பி வேலி அமைப்போம் எனக் கூறி குவாரியை இயக்கும் குவாரி உரிமையாளா்கள் பின்னா் கண்டுகொள்வதே கிடையாது. குவாரிகளுக்கு அருகே வனப்பகுதியில் பல்வேறு வகையான விலங்கினங்களும் வாழ்கின்றன. அவற்றை பாதுகாப்பது நம் கடமை என்பதால் சட்டவிரோதமாக பாதுகாப்பற்ற நிலையில் கரூா் மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

சமூக ஆா்வலா் விஜயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com