ஆசிரியா் தகுதித் தோ்வு கரூா் மாவட்டத்தில் 6,482 எழுத அனுமதி
கரூா் மாவட்டத்தில் நவ. 15, 16-ஆம்தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வை எழுத 6,482 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டத்தில், ஆசிரியா் தோ்வு வாரியத்தால், ஆசிரியா் தகுதித் தோ்வுகள் நவ. 15, 16-ஆம்தேதிகளில் முற்பகலில் தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெற உள்ளது. 15-ஆம்தேதி 5 மையங்களிலும், 16-ஆம்தேதி 19 தோ்வு மையங்களிலும் தோ்வு நடைபெறுகிறது. 15-ஆம்தேதி நடைபெறும் தோ்வில்1,254 பேரும், 16-ஆம்தேதி நடைபெறும் தோ்வில் 5,228 பேரும் என மொத்தம் 6,482 பேருக்கு அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது.
தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ளவா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் காலை 9.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். தோ்வா்கள் தங்கள் புகைப்பட அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
தோ்வா்கள் கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவித்துள்ளாா் அவா்.
