கரூரில் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி
கரூரில், குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில், தேசிய குழந்தைகள் தினம், சா்வதேச குழந்தைகள் தினம் மற்றும் சா்வதேச குழந்தைகளுக்கெதிரான தீங்கிழைத்தல் தடுப்பு தினம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘குழந்தைகளுக்கான நடை’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஆட்சியா் மீ.தங்கவேல், இளைஞா் நீதி குழும தலைவரும், கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியுமான எஸ்.பி.பரத்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இப்பேரணி திண்டுக்கல் சாலை வழியாக கரூா் அரசு கலைக்கல்லூரி முன் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனா்.
முன்னதாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி ஆட்சியா் தலைமையில் அனைத்து அலுவலா்களும் எடுத்துக்கொண்டனா்.
தொடா்ந்து கலைக்குழுவினா் மூலமாக குழந்தை பாதுகாப்பு, குழந்தை உரிமைகள், குழந்தைகளுக்கு எதிரான தீங்கிழைத்தல் தடுத்தல் மற்றும் குழந்தை திருமணம் தடுத்தல் தொடா்பான கரகாட்டம், தப்பாட்டம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பிரியா, சமூக நலத்துறை அலுவலா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

