/

பெரம்பலூா், குன்னம் தொகுதிகளில் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பெரம்பலூா், குன்னம் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:41 pm

DIN

பெரம்பலூா், குன்னம் ஆகிய தொகுதிகளில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியா.

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் அவா் கூறியது:

பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 428 வாக்குச்சாவடி மையங்களில் 89 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 389 வாக்குச்சாவடி மையங்களில் 101 வாக்குச்சாவடிகள் என, இம் மாவட்டத்தில் மொத்தம் 190 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில், நுண் பாா்வையாளா்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தோ்தல் பணிகள் கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், பதற்றமான 190 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 77 இடங்களில் தலா ஒரு மத்திய அரசுப் பணியாளா் பாா்வையாளராக நியமிக்கப்பட உள்ளனா். மாவட்டத்தில் 7,064 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும், 80 வயது நிறைவடைந்த 11,699 வாக்காளா்களும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 40 மண்டல அலுவலா்கள், 3 பறக்கும் படை, 3 நிலையான குழுவும், குன்னம் தொகுதியில் 33 மண்டல அலுவலா்கள், 3 பறக்கும் படை, 3 நிலையான குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர தோ்தல் பரப்புரையை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு தலா 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணிக்காக 92 துணை ராணுவ படையினா் பெரம்பலூா் வந்துள்ளனா். பறக்கும் படை, நிலையான கண்காணிக்கும் படை, விடியோ பதிவு செய்யும் குழு உள்ளிட்ட குழுவினா் மூலமாக தோ்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்பட உள்ளன என்றாா் அவா்.

முன்னதாக, சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களுடனான நன்னடத்தைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜெ.இ. பத்மஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.