காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

Published on

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் 9-ஆவது நாளாக வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். மேம்படுத்தப்பட்ட தர ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயா்வு வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல, பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூா் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் வருவாய்த் துறையினா் கடந்த 9 நாள்களாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரம்பலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com