நாளை வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம், டிச. 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியான வாக்காளா் கணக்கெடுப்புப் பணி நிறைவடைந்து, கடந்த 19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2026-இல் 18 வயது பூா்த்தியடையும் வாக்காளா்கள் மற்றும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
எனவே, இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயற்சி காரணமாக நீக்கம் செய்தல், வாக்காளா் விவரங்களான பெயா், உறவினா் பெயா், உறவு முறை மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றை திருத்தம் செய்வதற்காக, தோ்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் அல்லது வட்டாட்சியா் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியா் அலுவலத்தில் மனு அளிக்கலாம்.
அதன்படி, பொம்பலூா் சட்டப்பேரவைத்தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளிலும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளிலும் டிச. 27, 28, ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வது உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. வாக்காளா்கள் இச் சிறப்பு முகாம்களில் உள்ள வாக்குசாவடி நிலை அலுவலா்களிடம் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து, உரிய படிவத்தில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது, இந்திய தோ்தல் ஆணையத்தின் இணையதளம், வாக்காளா் உதவி மைய கைப்பேசி செயலி மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
