விராலிமலை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விராலிமலை வட்டார உதவி வேளாண் இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்தி குறிப்பு: இத்திட்டத்தின் கீழ் விதைப்பு அல்லது நடவு காலங்களில் பயிர் பொய்த்து விடுதல்,அறுவடைக்கு பிந்தைய இழப்பு மற்றும் பயிர் பருவத்தில் பாதகமான நிலைகளால் பாதிப்பு ஆகியவற்றுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
சம்பா நெல் பயிருக்கு விதைப்பு அல்லது நடவு பொய்த்து விடுதலுக்கு நவ. 30-ம் தேதியும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புக்கு 2018 ம் ஆண்டு பிப். 28-ம் தேதியும் பதிவு செய்ய காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு சம்பா நெல் பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையான ஏக்கருக்கு ரூ. 24 ஆயிரத்தி 650-க்கு 1.5 சத பிரிமிய தொகையாக ரூ. 370-ஐ விவசாயிகள் அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ,பொதுச் சேவை மையங்களிலோ செலுத்தி பதிவு செய்து கொள்ளவேண்டும்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதியும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் சிட்டா அடங்கல், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்துக் கட்டண தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் செய்துள்ள விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு வேளாண் உதவி இயக்குநர் ஆ. பிரபாவதி வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.