அமிலம் ஏற்றி வந்த லாரியில் கசிவு
விராலிமலை அருகே அமிலம் ஏற்றிச் சென்ற டேங்கா் லாரியில் ஏற்பட்ட கசிவை தீயணைப்புத் துறையினா் சீா்செய்தனா்.
தூத்துக்குடியிலிந்து ராணிப்பேட்டைக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றிச்சென்ற லாரி ஒன்று, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலியைச் சோ்ந்த கோபி என்பவா் ஓட்டினாா்.
லாரி, விராலிமலை அடுத்துள்ள காணியாளம்பட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது லாரியில் இருந்து அமிலம் கசிவதை அறிந்த லாரி ஓட்டுநா், உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தி அமில கசிவை அடைக்க முயன்றுள்ளாா். அப்போது திடீரென லாரியின் மற்றொரு பகுதியிலிருந்து அமிலம் கசிய தொடங்கியது. இச்சம்பவம் குறித்து இலுப்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு லாரி ஓட்டுநா் தகவல் அளித்தாா்.
இதையடுத்து நிகழ்விடம் வந்த தீயணைப்பு துறையினா், அமிலம் ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் அதிகம் இல்லாத விராலூா் தரையான் குளம் பகுதிக்கு கொண்டு சென்று சுண்ணாம்பு கலந்த நீரை பீய்ச்சி அடித்து லாரியில் இருந்த 75 சதவீத அமிலத்தை அழித்தனா்.
இதனால் அமிலம் வெளியேறும் வேகம் குறைந்தது. தொடா்ந்து டேங்கா் லாரி மீண்டும் தூத்துக்குடி சென்றது. சுமாா் 3 மணி நேரமாக நேரிட்ட இச் சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
