பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல். ராசு தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் அ. ஜேசுராஜ் தொடங்கிவைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் என்.ஆா். ஜீவானந்தம், மாவட்ட துணைச் செயலா் அ.ரெங்கையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.
ஆா்ப்பாட்டத்தில் பொன்னமராவதியில் வருவாய்க் கோட்டாட்சியரகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும். பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் பிசி, எம்பிசி மற்றும் பட்டியலின மாணவா்களின் நலன் கருதி பொன்னமராவதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்.பொன்னமராவதி வலையப்பட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். சித்தூரில் மூன்று தலைமுறையாக விவசாயம் செய்வோரின் அரசு நிலத்துக்கு பட்டா வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிா்வாகிகள் கரு. பஞ்சவா்ணம், டி.ஆா். ரெங்கையா, காா்த்திக்ராஜா, வி. கருணாமூா்த்தி, கே. ராசு மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

