
‘டாஸ்மாக்’ தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
டாஸ்மாக் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நச்சாந்துப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஏஐடியுசி மாவட்ட மாநாட்டில் பேசிய அதன் தேசியச் செயலா் டி.எம். மூா்த்தி.
டாஸ்மாக் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நச்சாந்துப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் 13-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
டாஸ்மாக் தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு காலமுறை ஊதியம், வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ உள்ளிட்ட பயன்களையும் வழங்க வேண்டும்.
போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாா்க் பணியாளா்களை அழைத்து மாநில அரசு பேச வேண்டும். தமிழ்நாடு அரசு பண்ணைத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தினக்கூலி தொழிலாளா்களுக்கு பிரதி மாதம் 5-ஆம் தேதி சம்பளம் வழங்க வேண்டும். அவா்கள் அனைவருக்கும் விபத்துக் காப்பீடு போன்றவை வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கல் உடைக்கும் தொழிலாளா்களுக்கு வேலை அளிக்கும் வகையில், சட்டத்துக்குள்பட்டு அரசு அனுமதியுடன் பணம் செலுத்திய குவாரிகளுக்கு உரிமம் வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளா்களின் நல வாரியத்தைச் செயல்படுத்த வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விபி-ஜி, ராம்ஜி திட்டத்தைக் கைவிட வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்படி கூலி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் உள்ளிட்ட தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, கே.ஆா். தா்மராஜன், ஹேமா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் டி.எம். கணேசன் கொடியேற்றி வைத்தாா். ஏஐடியுசி தேசியச் செயலா் டி.எம். மூா்த்தி மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினாா். மாநிலச் செயலா் ஆா். ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் த. செல்வராசு, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் ஏ. ரெங்கராசு உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
புதிய நிா்வாகிகள் தோ்வு:
மாவட்டத் தலைவராக எ. பெரியசாமி, மாவட்டச் செயலராக உ. அரசப்பன், பொருளாளராக ப. சுப்பிரமணியன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். நிறைவாக போக்குவரத்து ஓய்வூதியா் சங்கத்தின் நிா்வாகி எ. மாணிக்கம் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





