புதுகையில் அங்கன்வாடி ஊழியா்கள் மறியல்: 1,025 போ் கைது
தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, அரசு ஊழியராக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மறியலில் 1,025 போ் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.
கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. லதா, பொருளாளா் எஸ். சவரியம்மாள் ஆகியோா் பேசினா். போராட்டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா், தலைவா் கே. முகமதலிஜின்னா, பொருளாளா் சி. மாரிக்கண்ணு, மாவட்டத் துணைச் செயலா்கள் எஸ். முகமதுகனி, வி. சரவணன், மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் பேசினா்.
போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக அறிவித்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ.10 லட்சம், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். குடும்ப மாத ஓய்வூதியம் ரு. 9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 1025 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

