தஞ்சாவூரில் மூன்று விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரும் ஜன. 1-ஆம் தேதி வருகிறார்.
தஞ்சாவூருக்கு ஜன. 1-ஆம் தேதி பிற்பகலில் வரும் அவர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் மாலையில் நடைபெறவுள்ள சலங்கை நாதம் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
பின்னர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஜன. 2-ம் தேதி காலை நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் பங்கேற்று, நூல் வெளியிடுகிறார். இதையடுத்து, மாலையில் திருவையாறில் நடைபெறவுள்ள 171-ஆம் ஆண்டு ஸ்ரீ தியாகராஜ ஆராதனை விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம், மாவட்டக் காவல் துறை சார்பில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, திருவையாறில் ஜன. 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள தியாகராஜர் ஆராதனை விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை புதன்கிழமை ஆய்வு செய்தார். விழா அரங்கைப் பார்வையிட்டு தேவையான இடங்களில் மணல் இட்டு நிரப்பவும், காவிரியாற்றுக் கரையோரத்தில் தடுப்பு அமைக்கவும், வாகனம் நிறுத்துமிடத்தைச் சமப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.