சசிகலா தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியாக முயற்சி: டிடிவி தினகரன்

சசிகலா தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியாக முயற்சி மேற்கொண்டு வருவதாக அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன்.

சசிகலா தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியாக முயற்சி மேற்கொண்டு வருவதாக அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் ஒரத்தநாடு மா.சேகர் இல்லத் திருமணவிழா ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாட்டில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்த அமமுக பொது செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரன் கலந்துக்கொண்டு மணமக்கள் டாக்டர் சே.சுருதி, டாக்டர் வே.முருகேசகன் ஆகியோரை வாழ்த்தி பேசுகையில்: இன்றைக்கு அரசியலில் பல்வேறு விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருப்பதை, அரசியலில் பெரிதும் விழிப்போடு உள்ள ஒரத்தநாடு பகுதி பெருமக்கள் கவனித்து வருகிறீர்கள்.

சசிகலா விடுதலை அடைந்தவுடன் தமிழகத்தில் பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது. சசிகலா எதற்காக தண்டிக்கப்பட்டார், என்ன காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் மன்றத்தில் தான் ஒரு நிரபராதி என நிரூபித்து காட்டியுள்ளார். இந்த ஆட்சி அதிகாரம் நாங்கள் கொடுத்தது. இந்த நான்காண்டு காலம் இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என எல்லோருக்கும் தெரியும். கல்லாப்பெட்டி கட்டி, பர்சண்டேஜ் வாங்கியவர், இதைத் தவிர வேறு தெரியாதவர் சொல்கிறார் 100 சதவீதம் சசிகலாவை சேர்க்கமாட்டோம் எனவும், டிடிவி.தினகரன் தனிமரம் எனக் கூறுகிறார்.

இந்த தனிமரத்துக்கு எத்தனை ஆனிவேர் உள்ளது என பெங்களூரிலிருந்து சென்னை வரை பார்த்திருப்பார்கள். அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறவர் அந்த கட்சிக் கொடியை தான் கட்டிக் கொண்டு வர முடியும். கொடி தொடர்பாக முடிவு செய்வதெல்லாம் நீதிமன்றம். இன்னும் 10-15 தினங்களில் எல்லாம் மாறிவிடும். அமமுக ஆரம்பிக்கப்படதே, அதிமுகவை மீட்க தான் என்பதை ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, ஜனநாயக வழியில் அந்த இயக்கத்தை மீட்டெடுக்கப்படும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: பிரதமர் மோடி தமிழகத்துக்கு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதனால் அவரின் தமிழக வருகை ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அம்மாவின் தொண்டர்கள் இருப்பதுதான் அமமுகவில் தான். இந்த இயக்கம் மட்டும் தான் முதல் அணி. இதில் மூன்றாவது, நான்காவது அணி எல்லாம் இல்லை. திமுக போன்ற தீய சக்தி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் அமமுக உறுதியாக உள்ளது. தினகரன் கூட சென்றவர்கள் எல்லாம், ரோட்டில் நிற்பார்கள் எனக்கூறுகிறார்கள். 

அதே சமயம் தப்பிதவறி திமுக ஆட்சிக்குவந்தால் நாங்கள் சந்தோசமாக எப்பொழுதும் இருப்போம். ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் எங்கு இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியும். அமமுகவின் எதிர்காலம் என்பது பிரகாசமாக உள்ளது. சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, சட்ட ரீதியாக சில முயற்சிகளை செய்து கொண்டுள்ளோம், அதில் வெற்றி பெற்றவுடன் அவர் போட்டியிடுவார். சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றார் டிடிவி.தினகரன். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி உள்பட அமமுக மாநில,மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com