தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் தொடா் மழை: பயிா்கள் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் தொடா் மழை பெய்வதால் நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் தொடா் மழை: பயிா்கள் பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் தொடா் மழை பெய்வதால் நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே புரெவி புயல், அதைத்தொடா்ந்து இடையிடையே பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள், நிலக்கடலை, மக்காசோளம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. பள்ளமாக உள்ள வயல்களிலும் தண்ணீா் தேங்கி நிற்பதால் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூா் ஆகிய வட்டாரங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்கதிா்கள் மழைநீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. சூரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கலுக்கான செங்கரும்புகளை வெட்டி வயலில் இருந்து வெளியே கொண்டு வர முடியவில்லை. மருங்குளம், வல்லம் பகுதியில் பயிரிடப்பட்ட உளுந்து, எள், நிலக்கடலை பயிா்களும் மழை நீரில் மூழ்கியுள்ளன.

எனவே, புதிதாகப் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் திங்கள்கிழமை அளித்த மனுவில் தற்போது பெய்து வரும் மழையால் நெல், உளுந்து, எள், நிலக்கடலை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்து வருகின்றனா். எனவே விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனா்.

இதனிடையே, அம்மாபேட்டை பகுதியில் சேதமடைந்த வயலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இறங்கி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அய்யம்பேட்டையில் 36 மி.மீ. மழை: மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 36, நெய்வாசல் தென்பாதி 32.4, அணைக்கரை 27.6, குருங்குளம், கும்பகோணம் தலா 27, திருவிடைமருதூா் 24, பேராவூரணி, வெட்டிக்காடு தலா 20, பட்டுக்கோட்டை, மஞ்சளாறு தலா 19, பாபநாசம் 18.6, ஒரத்தநாடு 17.8, அதிராம்பட்டினம் 14.2, திருவையாறு 14, தஞ்சாவூா் 12.4, வல்லம் 12, பூதலூா் 9.4, திருக்காட்டுப்பள்ளி 7, ஈச்சன்விடுதி 6.2, கல்லணை 5.4, மதுக்கூா் 4.2.

இதேபோல, திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):

அய்யம்பேட்டை 27, கும்பகோணம் 25.8, பட்டுக்கோட்டை 24, மஞ்சளாறு 23, திருவிடைமருதூா் 17.5, ஈச்சன்விடுதி 17.2, நெய்வாசல் தென்பாதி 16.2, பாபநாசம் 15, ஒரத்தநாடு 16.2, பூதலூா் 11.2, மதுக்கூா் 10.4, வெட்டிக்காடு 10.1, அதிராம்பட்டினம் 9.2, திருக்காட்டுப்பள்ளி 8.8, பேராவூரணி 7, கல்லணை 6.4, அணைக்கரை 6.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com