/

போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:49 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கால்நடைகளுக்குக் கால்நடை மருத்துவப் பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்ற கால்நடை மருத்துவா்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதை மீறி போலி மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பதும், அவா்களிடம் கால்நடைகளுக்குச் சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.

போலி நபா்களிடம் கால்நடைகளுக்குச் சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு, இழப்பீடுகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது.

மாவட்டத்தில் சில இடங்களில் சினை ஊசி போடுவதற்குப் பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்களில் சிலா் போலியாக கால்நடை மருத்துவா் எனக் கூறி மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கின்றனா். இது முற்றிலும் தவறு.

செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் மாடுகளுக்குச் சினை ஊசி போடுவதற்கு மட்டும், 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனா். அவா்களுக்குக் கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய மருந்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவா்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்யத் தகுதியுள்ளவா்கள்.

எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சை பெற அங்கீகரிக்கப்பட்ட (பதிவு பெற்ற) மருத்துவா்களை மட்டுமே மக்கள் அணுக வேண்டும். போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் ரூ. 1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.