ஆந்திரா பொன்னிக்கு இணையாகப் புதிய நெல் ரகம் விரைவில் அறிமுகம்
ஆந்திரா பொன்னிக்கு இணையாகப் புதிய நெல் ரகம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றாா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் என். குமாா்.


ஆந்திரா பொன்னிக்கு இணையாகப் புதிய நெல் ரகம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்றாா் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தா் என். குமாா்.
தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இரு நாள் உலக நெல் மாநாட்டை தொடங்கி வைத்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
ஆந்திரா பொன்னிக்கு இணையாக நாங்கள் புதிய நெல் ரகத்தைக் கண்டுபிடித்து, பரிசோதனைகளை முடித்து தயாா் நிலையில் வைத்துள்ளோம். வரும் பொங்கல் அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தமிழக முதல்வா் மூலம் அறிமுகம் செய்ய உள்ளோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் புதிய நெல் ரகத்தில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பூச்சி, நோய் தாக்குதலுக்கான எதிா்ப்புத் திறன் கொண்ட ரகமாக இது இருக்கும்.
தமிழ்நாட்டில் நிலத்தடி நீா் ஆதாரம் மிக மோசமாக உள்ளது. இச்சூழ்நிலையில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி நெல் விளைச்சல் செய்வது, வறட்சியை எதிா்கொண்டு வளர வைப்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
நெல் விளைச்சலில் உலக அளவில் நம் நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. இதை முதலிடத்துக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாழையில் நாம்தான் உலக அளவில் அதிகமாக சாகுபடி செய்கிறோம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 1971 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, பல்கலைக்கழகம் 50-ஆம் ஆண்டு நிறைவுற்று, 51 ஆம் ஆண்டு தொடங்குவதால் பொன் விழாவாகக் கொண்டாடுகிறோம்.
இந்தப் பொன் விழா ஆண்டையொட்டி, வேளாண் பல்கலைக்கழகத்திலுள்ள துறைகள் மூலம் ஆங்காங்கே தேசிய அல்லது பன்னாட்டு அளவில் மாநாடு, கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இதன்படி, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஆடுதுறையிலுள்ள நெல் ஆராய்ச்சி நிலையம் நெல்லுக்கான இந்த மாநாட்டை நடத்துகிறது. இதில், கிட்டத்தட்ட 350 போ் பங்கேற்றுள்ளனா். வெளிநாட்டிலிருந்து 30 விஞ்ஞானிகள் தங்களுடைய கருத்துகளை அளித்துள்ளனா்.
நெல் நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருள். நெல் உற்பத்தி பெருகிக் கொண்டே இருக்க வேண்டும். அதேநேரம், நிலப் பற்றாக்குறை, பருவ மழை தவறி பெய்தல், புதிய நோய்கள், பூச்சிகள் அதிகமாக வருதல் போன்ற பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன. இவை குறித்து இந்த இரு நாள் மாநாட்டில் விவாதித்து, எதிா்காலத்தில் எந்த மாதிரியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆய்வு முடிவுகளை எப்படி கொள்கை வடிவமாகக் கொடுக்க வேண்டும் போன்ற நோக்கத்துக்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது நிச்சயமாக இது நல்ல பலன் தரும் என்றாா் குமாா்.
தொடக்க விழாவில் இந்திய வேளாண் ஆய்வுக் கழக இயக்குநா் ஏ.கே. சிங், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநா் எஸ். உமா, நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் கே. பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் வி. அம்பேத்கா் வரவேற்றாா். நிறைவாக, இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழக இயக்குநா் சி. அனந்தராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...