சரக்கு ஆட்டோவில் 650 கிலோ  ரேஷன் அரிசி கடத்தியவா் கைது

பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா்.
Published on

தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை 650 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்ற நபரை காவல் துறையினா் கைது செய்தனா். 

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தஞ்சாவூா் மாவட்டக் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினா் திருவோணம் மூன்று சாலை சந்திப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா்.

அப்போது சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 13 மூட்டைகளில் இருந்த 650 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்து, ஒரத்தநாடு அருகே நரங்கியன்பட்டு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியனை (48) கைது செய்தனா். திருவோணம், மேட்டுப்பட்டி, தோப்பு விடுதி உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி இட்லி மாவு அரைத்து விற்பனை செய்வது விசாரணையில் தெரிய வந்தது.

Dinamani
www.dinamani.com