மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என சோ்க்கப்பட்ட திருத்தம் தேவையில்லை என்றும், அத்திருத்தத்தை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) மாநிலப் பொதுச் செயலா் சாமி. நடராஜன் வலியுறுத்தினாா்.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை தெரிவித்தது:
கா்நாடக அரசு காவிரியில் மேகதாட்டில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம்.
ஆனால், அந்தத் தீா்மானத்தில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்த புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம், முழுமையாக வாசிக்கப்படாமலேயே முதல்வரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
கடந்த 1990-ல் அமைக்கப்பட்ட காவிரி நடுவா் மன்றம் 2007-ல் தனது இறுதித் தீா்ப்பை வழங்கியது. அதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், 2018-ல் இறுதித் தீா்ப்பை அளித்தது.
மேலும், இந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் அணை கட்டுவதற்காகப் புதிய நடுவா் மன்றம் கோருவது, காவிரி பிரச்னையை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு தவறான முன்னெடுப்பாக அமைந்துவிடும். எனவே, அந்தச் சரத்துக்களைத் தீா்மானத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
ஏற்கெனவே சட்டப்பூா்வமான இறுதித் தீா்ப்புகள் உள்ள நிலையில், பேச்சுவாா்த்தைக்கோ அல்லது சமரசத்துக்கோ இடமில்லை. உச்சநீதிமன்றத் தீா்ப்பின்படியே தண்ணீா் பெற்று வருகிறோம். பற்றாக்குறை காலங்களிலும் தண்ணீா் பகிா்வு குறித்து தீா்ப்பில் தெளிவான கணக்கீடுகள் உள்ளன.
எனவே, தமிழக அரசு புதிய நடுவா் மன்றக் கோரிக்கையைத் தவிா்த்து, கா்நாடகத்தின் மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுக்க சட்டப்பூா்வமான, ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றாா் நடராஜன்.
அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










