
நலிவடைந்த நிலையில் உள்ள தொழிலகங்களை மீட்டெடுக்க மத்திய அரசு மறுவாழ்வுத் திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என கொதிகலன் தொழிலகங்கள் எதிர்நோக்கிகாத்திருக்கின்றன. அவ்வாறு வழங்குவதன் மூலம் தொழிலகங்களை மீண்டும் உயிரூட்ட முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 1970-களில் மிகச்சிறிய அளவில் தொடங்கப்பட்ட கொதிகலன்கள் உள்ளிட்ட பொருள்களைத் தயாரிக்கும் குறு, சிறு தொழிலகங்கள் படிப்படியாக வளர்ந்து 2010ஆம் ஆண்டில் 450க்கும் மேற்பட்ட எண்ணிக்கையாக உயர்ந்தன. துவாக்குடி மட்டுமல்லாது வாழவந்தான்கோட்டை, புதுக்குடி, தேவராயநேரி, மாத்தூர் போன்ற பகுதிகளில் இத்தொழிலகங்கள் இயங்கி வந்தன. ரூ.2,500 கோடி முதலீட்டில் இயங்கிய இத்தொழிலகங்களில் தலா 20,000 பேர் நேரடி, மறைமுகமாக பணியாற்றி வந்தனர்.
இந்த தொழிலகங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது திருச்சிபெல் நிறுவனமாகும். 80 மெகாவாட் கொதிகலனைத் தயாரிக்கத் தொடங்கிய பெல் நிறுவனம், தற்போது 800 மெகாவாட் உயர் அழுத்த கொதிகலன்களைத் தயாரிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் 219 நிலக்கரி சுரங்கங்களுக்கான ஆணைகளை நிறுத்தி உத்தரவிட்டதால் ஏறக்குறைய 20 கொதிகலன் கொள்முதல் ஆணைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பெல் நிறுவனத்தைச் சார்ந்திருந்த கொதிகலன்கள் தயாரிக்கும் குறு, சிறு தொழிலகங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கத் தொடங்கின. தங்களிடம் ஏற்கெனவே உள்ள கொள்முதல் ஆணைகளுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்து தருதல் போன்ற பணிகளுக்காக வங்கிகளிடம் ஏற்கெனவே கடன் பெற்று தொழிலகங்களை விரிவுப்படுத்தி செயல்பட்ட கொதிகலன் தொழிலகங்களுக்கு இந்த பாதிப்பு பெரிய அளவில் நலிவை ஏற்படுத்தத் தொடங்கியது. இதோடு பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பும் நெருக்குதலை அளிக்க இத்தொழிலகங்கள் மேலும் பாதிப்பைச் சந்திக்க ஆரம்பித்தன.
தொடர்ந்து கொள்முதல் ஆணைகள் நிறுத்தம் காரணமாக கொதிகலன் தொழிலகங்களின் உற்பத்தியும் சரிபாதி அளவுக்கு குறைந்ததால், பணிகள் பாதிப்பு ஏற்பட்டதால் தொழிலகங்கள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. தற்போதைய நிலையில் 100 தொழிலகங்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், 50 தொழிலகங்கள் நீதிமன்றங்களின் ஜப்தி நடவடிக்கைக்கும், 100 கொதிகலன் தொழிலகங்கள் மூடும் நிலையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன. எஞ்சியிருக்கும் 150 தொழிலகங்கள் பெரும் சவாலுடன் இயங்கி வருகின்றன.
ஆணைகள் மீண்டும் கிடைக்க வழி: சில ஆண்டுகளுக்கு முன்பு பெல் நிறுவனத்துக்கு இருந்த நிலை மாறி, தற்போது அந்த நிறுவனத்துக்கான கொள்முதல் ஆணைகளின் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்குவதால் அதே அளவில் வளர்ச்சியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெல் நிறுவனத்துக்கு தற்போது இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளின் மின்உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பு, ரயில்வேயிலிருந்து கொதிகலன் தொழில் கூட்டமைப்புக்கு ஆணைகள் கிடைத்திருக்கின்றன. மேலும், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நடவடிக்கையால் பாதுகாப்புத் தொழில் வளாகப் பிரிவில் திருச்சியும் இணைக்கப்பட்டிருப்பதால், ரயில்வேக்கு மட்டுமல்லாது, ராணுவத்துக்குத் தேவையான உதிரிபாகங்கள் தயாரித்து வழங்கவும் இத்தொழிலகங்கள் தயாராக இருக்கின்றன.
மறுவாழ்வுத் திட்டம் அவசியம்: நலிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் கொதிகலன் தொழிலகங்கள் மீண்டும் பழைய நிலையை நோக்கிச் செல்ல வேண்டுமெனில், பாரத ரிசர்வ் வங்கி மூலம் இந்திய அரசு மறுவாழ்வுத் திட்டத்தின்கீழ் குறைந்த வட்டியில் ரூ.600 கோடி கடனுதவியை அளிக்க வேண்டும். இதில் ரூ.400 கோடி வங்கிகளுக்கு தொழிலகங்கள் செலுத்த வேண்டியிருப்பதால், மீதமுள்ள ரூ.200 கோடியைக் கொண்டு தொழிலகங்களை நடத்த முடியும். இதன்மூலம் குறைந்தது 10,000 பேருக்கு மீண்டும் வேலைவாய்ப்பை அளிக்க முடியும்.
எங்கெங்கல்லாம் மறுவாழ்வுக்கான சாத்தியக்கூறு இல்லையோ, அங்கு ஒருமுறைத் தீர்வுத் திட்டத்தின் கீழ், வங்கிகளின் நடவடிக்கைக்கு உள்படுத்தப்பட்டிருக்கும் தொழிலகங்களுக்கு 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கிட வேண்டும். மேலும், தொழிலகங்களை வாங்குவதற்கு ஆளில்லாத பட்சத்தில் பாரத ரிசர்வ் வங்கி பொது வங்கிகளின் மூலம் கடன் வழங்குவதற்கு உதவிட வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கொதிலகன்கள் கூட்டமைப்பின் பொருளாளர் ராஜப்பா ராஜ்குமார்.
கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக அரசுக்கு முறையாக வரி செலுத்தி, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்த கொதிகலன் தொழிலகங்கள், தற்போது தொழிலை நடத்த பெரும் பாடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் புது தொழிலகங்களை எவ்வாறெல்லாம் ஊக்குவிக்கின்றதோ, அதேபோல, ஏற்கெனவே இருக்கும் தொழிலகங்களையும் ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது.
ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: வங்கிகளில் கடன் பெற்று அதனை முறையாகச் செலுத்தி வந்த தொழிலகங்கள், போதிய ஆணைகள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் உற்பத்தித் திறனை இழந்து தற்போது பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், வங்கிகளின் ஜப்தி நடவடிக்கைகளும் பெரும் சிரமத்தை அளித்து வருகின்றன. ஜப்தி நடவடிக்கையால் மிக உயர்ந்த மதிப்புடைய சாதனங்கள், உதிரிபாகங்கள் மதிப்பிழந்து பழைய இரும்பு மதிப்புக்குச் சென்று விடுகின்றன. எனவே தொழிலகங்கள் மீண்டும் பழைய நிலையை அடையும் வரையில் ஜப்தி நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்கிறார் ராஜப்பா ராஜ்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







