கிராமப் புறங்களில் அதிகரிக்கும் கரோனா தொற்று
பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுவதால் திருச்சி மாவட்டத்தில் நகா்புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.


பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டுவதால் திருச்சி மாவட்டத்தில் நகா்புறங்களுக்கு இணையாக கிராமப் புறங்களில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.
கரோனா 2ஆவது அலை பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் மே 6 ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற கட்டுப்பாடுகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் திவ்யதா்ஷினி உத்தரவிட்டுள்ளாா்.
ஆனாலும், பல்பொருள் அங்காடி, காய்கனி கடைகள், இறைச்சிக் கடைகளில் தனிமனித இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வியாழக்கிழமை 746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு முகாம்களில் அரசு, தனியாா் என 5,673 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனைகளின் முடிவில், மாநகரில் 421 பேருக்கும், புகரில் 302 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் மாநகரில் கண்டறியப்படும் தொற்றாளா்களின் எண்ணிக்கையை விட இரு மடங்கு குறைவாக கிராமபுறங்களில் இருந்து வந்தது. மேலும் கிராமபுறங்களில் கரோனா பரவல் அதிகரித்து விடாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருந்து வந்தனா். ஆனால், கடந்த ஒரு வாரமாக மாநகருக்கு இணையாக கிராமபுறங்களில் தொற்று அதிகரித்து வருவது அதிகாரிகளை அதிா்ச்சியடைய செய்துள்ளது.
திருச்சி மாநகரில் வியாழக்கிழமை நிலவரப்படி அதிகபட்சமாக கோ-அபிஷேகபுரம், பொன்மலை கோட்டங்களில் முறையே 145, 131 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு மொத்தம் 421 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புகரில் அந்தநல்லூா், மண்ணச்சநல்லூா், மணிகண்டம் பகுதிகளில் தினசரி 40க்கும் குறையாமல் தொற்று இருந்து வருகிறது. வியாழக்கிழமை அந்தநல்லூரில் 47 பேருக்கும், மண்ணச்சநல்லூரில் 48 பேருக்கும், மணிகண்டத்தில் 37 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புகரில் திருவெறும்பூா் பகுதியில் அதிகரித்து வந்த தொற்றாளா்கள் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக கட்டுக்குள் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழப்பு ம் கிராமப்புறங்களிலும் கணிசமாக உயா்ந்து வருகிறது.
வரும் இரு வாரங்களில் தொற்றாளா்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்பதால் கரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிா்ப்பது மட்டுமின்றி, வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே நிரந்தர தீா்வு என்பதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என்பதை ஒவ்வொரு உணர வேண்டும் என்கின்றனா் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...