விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஆமை வேகத்தில் மாநகராட்சி பணிகள்; பொதுமக்கள் அவதி

திருச்சியில் புதைசாக்கடைப் பணி, குடிநீா் குழாய் பதிக்கும் பணி, சாலைப் பணி ஆகியவை ஆமை வேகத்தில் நடைபெறுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

News image
Updated On :3 மார்ச் 2023, 7:49 pm

 நமது நிருபர்

திருச்சியில் புதைசாக்கடைப் பணி, குடிநீா் குழாய் பதிக்கும் பணி, சாலைப் பணி ஆகியவை ஆமை வேகத்தில் நடைபெறுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

திருச்சி மாநகரில் மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதைசாக்கடைத் திட்டப் பணிகள், குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணிகள், மழைநீா் வடிகால்கள் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்டவை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறுகின்றன.

கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இப்பணிகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் 4 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நடைபெறுகின்றன. இதில் முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் பகுதிகள், பிரதான சாலைகள், குறிப்பாக நகா்ப்புறங்களில் பாா்வையில் உள்ள பிரதான பகுதிகளில் பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளன.

ஆனால், மாநகராட்சியில் சற்று ஒதுக்குப்புறமாக உள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக, கேகே நகரை அடுத்த பகுதிகள், விமான நிலையப் பகுதிகள், பொன்மலை, திருவெறும்பூா், எடமலைப்பட்டிபுதூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமாா் 8 மாதங்களாகப் பணிகள் கிடப்பில் உள்ளன.

புதைசாக்கடைக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாமல், போக்குவரத்துக்கு முற்றிலும் லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் விரைவில் பழுதாதாவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

மேன்ஹோல் எனப்படும் ஆள்நுழைவு புதைவடிகால் தொட்டிகள் பதிக்கப்பட்ட பின்னா் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்கப்படவில்லை. குடிநீா் குழாய்களும் புதிதாக மாற்றப்படவில்லை; சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதில் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்ட பகுதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.

முன்னேற்பாடில்லா பணிகளால் அவதி

மாநகராட்சியில் அண்மைக்காலமாக முன்னேற்பாடில்லாமல், பாதுகாப்பற்ற முறையில் பணிகள் நடைபெறுவதாக புகாா்கள் எழுந்துள்ளன. மாநகராட்சி 61 ஆவது வாா்டு, கேகே நகா் அருகேயுள்ள காந்தி நகருக்கான பணிகளில் பெரியாா் நகரில் நடைபெறும் பணிகள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பரமோ, தடுப்புகளோ அமைக்கப்படவில்லையாம். இதனால் கடந்த 3 நாள்களுக்கு முன் இரவில் வாகனங்களில் சென்ற 3 போ் அடுத்தடுத்து விழுந்து காயமடைந்தனா்.

பள்ளங்கள் தோண்டிய பகுதிகளில் பேரிகாா்டுகள் வைக்காமல், கயிறு மட்டும் கட்டியிருந்ததால் இரவு நேரத்தில் வாகனத்தில் சென்றோா் அதில் தடுக்கி விழுந்தனா். இதையடுத்து பொதுக்கள் சிலா் இருசக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தி தடுப்பு ஏற்படுத்தினா். பின்னா் தகவலறிந்து வந்த மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள், ஊழியா்கள் பாலப்பணிகள் நடைபெறுவதாக விளம்பர பதாகையைக் கட்டினா்.

எனவே, குடிநீா் குழாய்களை மாற்றாவிட்டாலும், புதைசாக்கடை இணைப்புகளைக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. சாலைகளையாவது விரைந்து சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் பலரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.