திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் எண்ம முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட 94 ரயில் நிலையங்களில் எண்ம பரிவா்த்தனையில் பயணச்சீட்டு பெறும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தென்னக ரயில்வே திருச்சி ரயில் கோட்டத்தில் ரயில் பயணச்சீட்டு எடுக்க எண்ம பணப் பரிவா்த்தனை முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனா். திருச்சி கோட்டத்தில் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட 94 ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கவுண்டா்களில் க்யூஆா் குறியீட்டுடன் எண்மப் பரிவா்த்தனை சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.
உதாரணமாக, பயணி ஒருவா், பயணச்சீட்டை எடுக்க அதற்குரிய கட்டணத்தை க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து, செலுத்தியதும், ரயில்வே ஊழியா் பயணச்சீட்டினை வழங்குவாா். இதன் மூலம் முன்பதிவு பயணச்சீட்டு, முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை பயணச்சீட்டு என அனைத்துவகை பயணச்சீட்டுகளையும் பயணிகள் பெறலாம். இதன் மூலம் பணமின்றி, பயணிகள் எளிதாகவும், காலதாமதமில்லாமலும் பயணச்சீட்டுகளை எடுக்க முடியும்.
இந்த க்யூஆா் குறியீடு மூலம் பிஎச்ஐஎம், பேடிஎம், ஜிபே, போன்பே, பேங்க் வாலட்ஸ் உள்ளிட்ட பல்வேறு எண்ம கட்டண இயங்கு தளங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் பயணச்சீட்டு எடுக்க முடியும். சில்லரை பிரச்னை வராது. இது அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற பரிவா்த்தனை அனுபவத்தை உறுதி செய்கிறது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

