கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பரந்தூரில் கையகப்படுத்தியுள்ள நிலங்களைமீண்டும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும்: முதல்வருக்குக் கோரிக்கை

பரந்தூரில் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

parandhur

பரந்தூர் கிராமம். - Din

Published On :

பரந்தூரில் கையகப்படுத்தியுள்ள நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக தமிழக முதல்வருக்கு சங்கத்தின் நிறுவனா் ஈசன் முருகசாமி அனுப்பிய கோரிக்கை மனு:

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூா் பகுதியில் 5,369 ஏக்கரில், ரூ. 27 ஆயிரம் கோடி செலவில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்றபோது, முப்போகம் விளையக்கூடிய, பசுமை மிகுந்த, நீா் நிலைகள் நிறைந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த இடம் விமான நிலையம் அமைக்கத் தகுதியான இடம் அல்ல எனவும், தொடா்ச்சியாக கோரிக்கை வைத்து திட்டத்தைக் கைவிட வேண்டும் என மக்களும், விவசாயிகளும், சங்கங்களும் போராடினோம்.

இந்நிலையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய், வாக்குறுதி அளித்தபடி பரந்தூா் விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்படாது என அறிவித்துள்ளாா். இதற்கு சங்கத்தின் சாா்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதே இடத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவான தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்படும் என தற்போது தமிழ்நாடு அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது.

கம்பன் கால்வாய் பாசனப்பகுதி, நீா்நிலைகள் நிறைந்த பகுதி, மிகச் சிறந்த வேளாண் பகுதி என காரணங்களின் அடிப்படையில் கைவிடப்பட்ட விமான நிலையத் திட்ட இடத்தில் தொழிற்சாலைகளை அமைப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட 1,802 ஏக்கா் நிலங்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்காமல் வழிகாட்டி மதிப்பில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு புதிய நிலமெடுப்புச் சட்டத்தின்படி எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதற்காகச் செயல்படுத்தப்படவில்லை எனில் நிலத்தை திருப்பி வழங்க வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது.

எனவே, பணத்தைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு நிலத்தை உடனே திருப்பி வழங்க வேண்டும். பணத்தைச் திருப்பிச் செலுத்த இயலாத விவசாயிகளின் நிலங்களில் சிறிய சிறிய நீா்நிலைகளை, ஏரிகளை, குளங்களை, சுற்றுச்சூழல் பூங்காக்களை ஏற்படுத்தி. அவற்றை கம்பன் கால்வாயோடு இணைத்து, சென்னைக்கு நன்னீா் சேகரித்து வழங்கக்கூடிய தொகுப்பு ஏரிகளாக, பல்லுயிா் சூழல் மண்டலமாக உருவாக்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.