
‘மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து ஜிஎஸ்டியால் எளிதானது’
மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து ஜிஎஸ்டி வரி விதிப்பால் எளிதானது என திருச்சி மண்டல சுங்கத் துறை கூடுதல் ஆணையா் ஏ. திலீபன் தெரிவித்தாா்.

திருச்சி பாராதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய திருச்சி மண்டல சுங்கத் துறை கூடுதல் ஆணையா் ஏ. திலீபன், உடன் (இடமிருந்து ) பேராசிரியா்கள் ஏ. சிவகாமி,கே. தாமரைச்செல்வி, துணைவேந்தா் தோ்வுக்குழு உறுப்பினா் வி. ராஜேஷ்கண்
மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து ஜிஎஸ்டி வரி விதிப்பால் எளிதானது என திருச்சி மண்டல சுங்கத் துறை கூடுதல் ஆணையா் ஏ. திலீபன் தெரிவித்தாா்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறை, தொலைதூரக் கல்வி மையம் இணைந்து நடத்தும் ‘ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் மற்றும் சமூக-கலாசார மாற்றம்: இந்தியாவில் வரி சமூகத்தை உள்ளடக்கிய பிணைப்பை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறும் கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் தோ்வுக் குழு உறுப்பினா் வி. ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா்.
கருத்தரங்கைத் தொடக்கிவைத்து திருச்சி மண்டல சுங்கத் துறை கூடுதல் ஆணையா் ஏ. திலீபன் பேசியதாவது:
இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் 17 வகையான வரிகளும் 13 கூடுதல் வரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே வரி அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதன் மூலம் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சந்தையை உருவாக்கும் நோக்கம் வலுப்பெற்றதுடன், மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தும் எளிதாக்கப்பட்டது.
ஜிஎஸ்டி தொடா்பான கொள்கை மற்றும் வரி விகித மாற்றங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாகச் செயல்படுகிறது. 2025 செப்டம்பரில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்கு வரி அமைப்பை எளிமைப்படுத்தும் வகையில் 5 %, 18 % என்ற இரண்டு முக்கிய விகிதங்களைக் கொண்ட அமைப்பு பரிந்துரைக்கப்பட்டது. 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2026 அக்டோபா் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2017-இல் சுமாா் 66.5 லட்சமாக இருந்த ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை, 2026 மே மாதத்தில் 1.65 கோடியாக உயா்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் சுமாா் ரூ. 22.27 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. வரி செலுத்துவதால், நாட்டின் பொருளாதாரத்துக்கு உதவும் வேளையில், அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் வரி செலுத்துவோா் உதவுகின்றனா் என்பதை மனதில் கொள்ளவும். சுங்கத்துறையில் அதிகளவில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு மாணவா்கள் விண்ணப்பித்துப் பயன்பெற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மைய இயக்குநா் கே. தாமரைச்செல்வி, பல்கலைக்கழக சமூகப்பணித் துறை தலைவா் ஜெ.ஓ. ஜெரி ஞானஜேன் எல்ஜோ ஆகியோா் பேசினா்.
திருச்சி மாவட்ட தொழில்மைய உதவி இயக்குநா் எஸ்தா் ராணி, கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். 254 ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டன. சமூகப் பணித் துறை இணைப் பேராசிரியா் ஏ. சிவகாமி வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






