ஈரோடு, ஜன. 20: இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து 7 மாதங்களாகியும் முதலாமாண்டுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இரண்டாம் ஆண்டு தேர்வுகளுக்கு தயார்படுத்திக்கொள்ள முடியாமல் பரிதவிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
÷தமிழகத்தில் சுமார் 700 இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்க கட்டுப்பாட்டில் இந்நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
÷இங்கு பயிற்றுவிக்கப்படும் 2 ஆண்டு பட்டயப் படிப்பில் முதலாண்டில் 7 பாடங்களும், இரண்டாமாண்டில் 7 பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு தேர்வுகள் துறை இத் தேர்வுகளை நடத்துகிறது.
÷கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் முதலாண்டு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி தொடங்கி, மாத இறுதிக்குள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஜூலை 19ம் தேதி தொடங்கி மாத இறுதிக்குள் மதிப்பெண் விவரங்கள் அரசு தேர்வு துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
÷தேர்வு நடந்து முடிந்து 7 மாதங்களும் விடைத்தாள் மதிப்பீடு செய்து 6 மாதங்களும் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு டிச. 31ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. முடிவுகள் வெளியிடப்பட்டு 20 நாட்களாகியும் இதுவரை மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.
÷இரண்டாமாண்டு வகுப்புகள் தொடங்கி 7 மாதங்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்னும் 3 மாதங்களில் இப் பாடங்களுக்கான தேர்வுகள் வந்துவிடும். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இத்தேர்வை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
÷முந்தைய தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால், தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள், முதலாண்டில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் 2ம் ஆண்டில் எழுதுவதற்குத் தங்களை தயார்படுத்திக்கொள்ள உரிய கால அவகாசம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
÷10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்தும் அரசுத் தேர்வுகள் துறைதான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஒரு மாதத்தில் வெளியிடும் இத்துறை, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முதல் ஆண்டு தேர்வு முடிவுகளை 7 மாதங்கள் முடிந்தும் வெளியிடவில்லை.
÷கடந்த ஆண்டில் பெரும்பான்மையான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதத்திற்கும் குறைவாக இருந்தது. இதனால் தேர்ச்சி பெறாத பாடங்களை இந்த ஆண்டில் மீண்டும் எழுதினாலும், அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெறுவது கடினம். இதனால் இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவர்கள் சதவிகிதம் இந்த ஆண்டு மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
÷பிஎட் கல்வியை பொருத்த வரை, பாடத்திட்டம் மற்றும் தேர்வு நடத்துவது உள்ளிட்ட அனைத்தும் கல்வியியல் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பிஎட் தேர்வுகளுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. இடைநிலை ஆசிரியர் பயிற்சியை பொருத்த மட்டிலும், பயிற்சி அளிக்க ஒரு துறை, தேர்வு நடத்துவது மற்றொரு துறை என்ற நிலை உள்ளது.
÷இதுகுறித்து தனியார் இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஒருவர் தெரிவித்தது:
÷ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் எதிர்காலம் கருதி, தேர்வு நடத்தப்படுவது குறித்தும், தேர்வு முடிவுகளை வெளியிடும் காலம் குறித்தும், அரசு உறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் பிஎட் படிப்புக்கு கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளது போன்று இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கும் தனித் துறை அல்லது பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும்.
÷தேர்வு முடிந்து 7 மாதங்களாகியும் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் இதற்கு பொறுப்பு வகிக்கும் பள்ளிக் கல்வித்துறை மீது மாணவர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
÷லட்சக் கணக்கான மாணவர்கள் எழுதும் பள்ளி பொதுத்தேர்வு முடிவுகளை இரண்டு மாதங்களில் வெளியிட முனைப்பு காட்டும் பள்ளிக் கல்வித்துறை, மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் தேர்வு முடிவுகளை அரையாண்டுக்கு மேல் வெளியிடாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.