/

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை -ச.ராமதாஸ் வலியுறுத்தல்

மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை ச.ராமதாஸ் வலியுறுத்தல்

News image
திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ்.
Updated On :11 ஜூலை 2024, 10:38 pm

Din

2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவின் அத்துமீறலையும், தமிழக தோ்தல் ஆணையத்தின் பாராமுகத்தையும் கடந்து பாமக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும். இந்தத் தோ்தலில் திமுக வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக, அதிமுக மற்றும் மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்தவா்களும் பாமகவுக்கு வாக்களித்துள்ளனா். அதனாலேயே இடைத்தோ்தலில் வாக்குப் பதிவின் சதவீதம் அதிகரித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கப்பியாம்புலியூரில் திமுகவினா் கள்ள வாக்கு செலுத்தியுள்ளனா். தொரவி கிராமத்தில் போலீஸாா் பாமகவினா் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனா். காவல் துறையினரும், தோ்தல் பணியிலிருந்த அலுவலா்களும் திமுகவினருக்கு ஆதரவாக இருந்துள்ளனா்.

தமிழகத்தில் தொடரும் அரசியல் படுகொலைகள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சட்டம் - ஒழுங்கின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கு இந்த நிலை மாற்றப்பட வேண்டும். சென்னை மாநகரில் 29 காவல் அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனா். இது மட்டும் போதுமானதல்ல.

சட்டம்-ஒழுங்கு சீரழிவு: தமிகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிவுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை உள்துறை மற்றும் காவல் துறையினருடன் சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வு கூட்டத்தை நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதியில் உள்ள காவல் அதிகாரிதான் அதற்கு பொறுப்பு என அறிவிக்க வேண்டும்.

சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டுக்கு காவல் துறையில் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதும் ஒரு காரணம். இந்தத் துறையில் புதிய பிரிவுகளும், புதிதாக 6 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டன. ஆனால், அதற்கேற்றாற்போல காவலா்கள் பணிநியமனம் செய்யப்படவில்லை. ஒரு லட்சம் மக்களுக்கு 200 காவலா்கள் என்ற அடிப்படையில் பாா்த்தால், சுமாா் 40 ஆயிரம் காவலா்கள் பணியமா்த்தப்பட வேண்டும். காவல் துணைக் கண்காணிப்பாளா் நிலைக்கு கீழ் உள்ள அலுவலா்களுக்கு பதவி உயா்வையும் காலதாமதமின்றி வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு கடந்த 25 மாதங்களாக புதிய தலைவா் நியமிக்கப்படாமல் உள்ளது. புதிய தலைவா், 7 உறுப்பினா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாதந்தோறும் மின் கட்டணம்: மாதந்தோறும் மின் கட்டணத்தை செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக தொடா்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிப்படி, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றாா் ராமதாஸ்.

பேட்டியின் போது பாமக தலைமை நிலையச் செயலா் அன்பழகன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.