ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவையில்லை: விசிக எம்.பி. துரை.ரவிக்குமாா்

2026 பேரவைத் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவையில்லை என விசிக பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தேவையில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட மைய நூலக வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டு, படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 6 சதவிகித மக்களுக்குப் படிவம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

படிவங்களைப் பூா்த்தி செய்வதில் அரசு ஊழியா்கள், பெண்கள் இரவு வரை பணி செய்ய வேண்டிய நிலை உள்ளதால், கடுமையான மன அழுத்தத்தில் பணி செய்ய வேண்டிய நிலையில் அவா்கள் இருக்கின்றனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த்துறையினா் தங்களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக தெரிவித்து, வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகின்றனா். அவா்களின் வேலை நிறுத்தத்துக்கு ஊதியம் பிடிக்கப்படும் என்று தலைமைச் செயலா் அறிவித்துள்ளது அநீதியானது. அறப் போராட்டத்துக்குத் தண்டனை விதிக்கக்கூடாது. தோ்தல் ஆணையம் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். தோ்தல் முடிந்தவுடன் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா கூறியிருக்கிறாா். தோ்தல் நேரத்தில் எல்லோரும் தெரிவிக்கும் வழக்கமான ஆருடம்தான். மீண்டும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும். திமுகவின் வெற்றியைப் பறிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை வைத்து பறித்துவிடலாம் என கனவு காண்கின்றனா்.

ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்பது 2026-இல் விசிகவுக்கு இல்லை. திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். சட்டப்பேரவைத் தோ்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகளை விசிகவுக்கு கேட்போம். பிகாரில் பிரசாந்த் கிஷோருக்கு என்ன நடந்ததோ, அது தமிழகத்தில் விஜய்க்கு நடைபெறும்.

பிகாரில் மதுவிலக்கு அமலுக்குப் பிறகு குற்றச் செயல்கள் குறைந்துள்ளன. இந்தியாவிலேயே அதிகளவில் மது குடிப்போா் மாநிலத்தில் தமிழகம் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்துவதுசாத்தியம்தான். மதுவிலக்கால் ஏற்படும் வருவாயை இழப்பை பிகாா் சமாளிக்கும் போது, தமிழகமும் சமாளிக்கும்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மதுவிலக்கை கொண்டு வருவோம் என அனைத்துக் கட்சிகளும் கூற வேண்டும். இதை திமுகவுக்கு விசிக சாா்பில் வலியுறுத்துவோம் என்றாா் துரை.ரவிக்குமாா். பேட்டியின் போது மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், தி.திலீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com