மரக்காணத்தில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலையோர ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து நிறைந்த பிரதானச் சாலைகளில் ஒன்றாக இருப்பது மரக்காணம் - புதுச்சேரி சாலையாகும். இந்த சாலையில் தான் மரக்காணம் பேரூராட்சி அலுவலகம், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகங்களும், கல்வித் துறை போன்ற அரசு அலுவலகங்கள், தனியாருக்குச் சொந்தமான ஏராளமன வணிக வளாகங்கள், தேநீா் கடைகளும் இந்தச் சாலையிலேயே உள்ளன.
மேலும், மரக்காணத்திலிருந்து புதுச்சேரி, திண்டிவனம் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களும் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலை நாள்தோறும் காலை முதல் இரவு வரையில் பரபரப்பாகவே காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த சாலையில் தனியாருக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களுக்கு பொருள்களை ஏற்றிவரும் சரக்கு வேன், காா், ஆட்டோ, இருசக்கர வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் மரக்காணம் -புதுச்சேரி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், வணிகா்களால் சாலையின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஏற்படும் இடநெரிசல் காரணமாக பிற வாகனங்கள் வந்து, செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள், பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்வோா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மரக்காணம் பேரூராட்சி அலுவலகம் எதிரேயுள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.
